‘Lindung 24/7’ திட்டம், வேலைத்தளத்தில் ஏற்படும் விபத்துகளை மட்டுமல்லாமல், அதற்கு அப்பாற்பட்ட சூழல்களிலும் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டு பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது.

புதிய PERKESO திட்டம், நாட்டின் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

பாரம்பரியமாக பெரும்பாலும் முதலாளிகளின் நிதியுதவியால் செயல்படும் பெர்கேசோ (PERKESO) திட்டங்களுக்கு மாறாக, Lindung 24/7 திட்டம் முழுமையாக தொழிலாளர்களால் நிதியளிக்கப்படும் திட்டமாகும்.

பெர்கெசோ (PERKESO) அறிமுகப்படுத்திய புதிய “Lindung 24/7” திட்டம், பணியிட விபத்துகளைத் தாண்டி பாதுகாப்பை விரிவுபடுத்துவதன் மூலம், மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Khazanah Research Institute-இன் ஆய்வாளர் பாதின் நதிரா (Fatin Nadirah) கூறுகையில், Lindung 24/7 திட்டம் ஏற்கனவே பெர்கெசோவிற்கு பங்களிப்பு செய்து வரும் ஊழியர்களுக்கான பாதுகாப்பை மேலும் விரிவுபடுத்துகிறது.

“ஊழியர்கள், தங்களின் வேலை அல்லது பணிக்கடமைகளுடன் நேரடியாக தொடர்பில்லாத, வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகளுக்கும் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்,” என்று அவர் FMT-க்கு தெரிவித்தார்.

மலேசியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பு பல தசாப்தங்களாக வேலை செய்யும் நேரத்தில் அல்லது பணியின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், இதனால் நாள் முழுவதும் மற்ற நேரங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

2023 முதல் 2025 அக்டோபர் மாதம் வரை, 12,306 இழப்பீட்டு கோரிக்கைகள், அவை வேலை தொடர்புடையவை அல்ல என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டன.

HELP University-யின் பொருளாதார நிபுணர் சுங் டின் ஃபா (Chung Tin Fah) கூறுகையில், வீட்டில் வழுக்கி விழுதல், விளையாட்டு காயங்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் போது ஏற்படும் விபத்துகள் போன்ற வேலை தொடர்பில்லாத விபத்துகளுக்கான இந்த பாதுகாப்பு, குடும்பங்களின் திடீர் நிதிச் சுமையை குறைக்க உதவும் என்றார்.

சமீபத்திய ஒரு சம்பவத்தில், பெனம்பாங் (Penampang) பகுதியைச் சேர்ந்த ஆர்னால்ட் நத்தனயேல் லிஸ்டர் (Arnold Nathanael Lister) வீட்டில் தவறி விழுந்து முதுகெலும்பில் கடுமையான காயம் அடைந்தார். Lindung 24/7 திட்டத்தின் கீழ், அவருக்கு உடனடி முதுகு இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை, தற்காலிக ஊனமுற்றோர் நிதியுதவி, உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy) மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன.

தொழிலாளர்களின் பங்களிப்பால் இயங்கும் திட்டம்

Lindung 24/7 திட்டம் முழுமையாக தொழிலாளர்களின் பங்களிப்பின் மூலம் நிதியளிக்கப்படுகிறது. இது பாரம்பரிய பெர்கெசோ திட்டங்களைப் போல முதலாளிகள் பெரும்பாலும் நிதியளிக்கும் முறை அல்ல.

இந்த திட்டத்திற்கான பங்களிப்பு மாதச் சம்பளத்தின் 0.75%-இல் தொடங்குகிறது. மூன்றாவது ஆண்டில் அது 1% ஆகவும், ஆறாவது ஆண்டிலிருந்து 1.25% ஆகவும் உயர்கிறது.

மாதம் ரிம 3,000 முதல் ரிம 5,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, மாதாந்திர பெர்கெசோ பங்களிப்பு ரிம 22.50 முதல் ரிம 37.50 வரை இருக்கும். இந்தத் தொகை அவர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும்.

முதலாளிகள், வழக்கமான பெர்கெசோ மாதாந்திர பங்களிப்புகளுடன் சேர்த்து இந்தத் தொகையையும் பெர்கெசோவுக்கு செலுத்துவார்கள். இதனால் தகுதியுள்ள ஊழியர்கள் தனியாக காப்பீட்டு பாலிசி எடுக்காமல் இந்த பாதுகாப்பைப் பெற முடியும்.

Lindung 24/7 திட்டம், வேலைவாய்ப்பில் இருக்கும் வரை வயது பேதமின்றி அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பை வழங்குகிறது. தனிப்பட்ட காப்பீட்டு திட்டங்களைப் போல நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு அளவுகள் மாறுபடாது.

மேலும், தற்காலிக ஊனமுற்றோர் நிதியுதவி, மறுவாழ்வு ஆதரவு போன்ற பலன்களையும் இந்தத் திட்டம் வழங்குகிறது. இதன் மூலம் விபத்தால் ஏற்படும் நிதிச் சுமையை சமாளிக்கவும், மீண்டும் வேலைக்கு திரும்பவும் தொழிலாளர்களுக்கு உதவுகிறது.

மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு இடைவெளிகள்

இந்த திட்டத்திற்கான கூடுதல் பங்களிப்புகள் ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளத்தை குறைக்கும் என்பதை பாதின் நதிரா ஒப்புக்கொண்டார்.

“குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு, சிறிய தொகை குறைந்தாலும் அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும்,” என்றார்.

எனவே, Lindung 24/7 போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கான சமூகப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விரிவான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில், உற்பத்தித் திறன் அதிகரிப்பிற்கு ஏற்ப ஊதியங்களும் உயர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தத் திட்டம் பெரும்பாலும் Employees’ Social Security Act 1969-இன் கீழ் ஏற்கனவே பாதுகாப்பு பெற்றிருக்கும் ஊழியர்களுக்கே பயனளிக்கிறது. ஆனால், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பில் இருப்பவர்கள் இன்னும் போதுமான பாதுகாப்பின்றி உள்ளனர் என்றார்.

சுங் டின் ஃபா கூறுகையில், இந்தத் திட்டத்தின் உண்மையான செயல்திறன் அது நடைமுறைக்கு வந்த பிறகே முழுமையாக தெரியவரும் என்றார்.

“எந்தத் திட்டமும் முழுமையாக குறைபாடற்றதாக இருக்காது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகே அதிலுள்ள இடைவெளிகள் எவை என்பதை அறிய முடியும். அதன்பிறகு தொடர்ந்து மேம்பாடுகளும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டியது அவசியம்,” என்று அவர் கூறினார்.