‘கார்ப்பரேட் மாஃபியா’ குறித்த விசாரணை சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறட்டும் – அசலினா 

“கார்ப்பரேட் மாஃபியா” தொடர்பான குற்றச்சாட்டுகள், பொதுநிறுவனங்களின் நேர்மையையும் மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடியவை என்பதால், அவற்றை அரசு மிகவும் தீவிரமாகக் கருதுகிறது என்று பிரதமர் துறையின் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) அமைச்சர் அசலினா ஒத்மான் சயித் தெரிவித்துள்ளார்.

நடந்து கொண்டிருக்கும் விசாரணைகள் சட்டத்திற்கும் நடைமுறைகளுக்கும் இணங்க, சுயாதீனமாகவும், வெளிப்படையாகவும், முழுமையாகவும் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“விசாரணையின் முடிவுகளே அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு முடிவும் உண்மைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது,” என்று அவர் இன்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

அசலினா, RSN ராயர் (ஹராப்பான்–ஜெலுடோங்) எழுப்பிய, “கார்ப்பரேட் மாஃபியா” குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் அதனை விசாரிக்க அரச விசாரணைக் குழு (Royal Commission of Inquiry – RCI) அமைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

மலேசியாவில் RCI அமைப்பது Commissions of Enquiry Act 1950 (Act 119) என்ற சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

தற்போது நடைமுறையில் உள்ள நிலையான செயல்முறை (SOP) படி, பொதுமக்களின் முக்கிய அக்கறைக்குரிய விஷயத்தைப் பற்றிய அமைச்சரவை நினைவுக் குறிப்பை (Cabinet Memorandum) சம்பந்தப்பட்ட முன்னணி அமைச்சகம் தயாரிப்பதன் மூலம் RCI அமைக்கும் நடைமுறை தொடங்குகிறது என்று அசலினா கூறினார்.

“அமைச்சரவை அந்த முன்மொழிவை அங்கீகரித்த பிறகு, பிரதமர் யாங் டி-பெர்துவான் அகோங் (மலேசிய மன்னர்) அவர்களைச் சந்தித்து, அவருடைய அரச ஒப்புதலைப் பெறுவார்,” என்று அவர் தெரிவித்தார்.

அரச ஒப்புதல் கிடைத்த பிறகு, RCI-யின் பணிக்கோள் (Terms of Reference), உறுப்பினர்கள் மற்றும் விசாரணைக்கான காலக்கெடு ஆகியவை முடிவு  செய்யப்படும். பின்னர், அவை கூட்டாட்சி அரசின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (Federal Government Gazette) வெளியிடப்பட்ட பின், அந்த ஆணையம் தனது பணியைத் தொடங்கும் என்று அவர் கூறினார்.

பொதுநலனுக்காக அவசியம் எனக் கருதப்பட்டால், RCI அல்லது அதற்கு ஏற்ற வேறு எந்த விசாரணை அமைப்பையும் உருவாக்க அரசாங்கம் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘கார்ப்பரேட் மாஃபியா’ பிரச்சினை மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்களை விசாரிக்க RCI அமைப்பது குறித்து எந்தவொரு பரிசீலனையும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படும்.

“மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது நடத்தி வரும் விசாரணைகளில் கிடைக்கும் உண்மைகள், கண்டறிதல்கள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்களும் அந்த முடிவில் கருத்தில் கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.