கோலாலம்பூர் மாநகராட்சியால் (DBKL) நிர்வகிக்கப்படும் மக்கள் வீட்டுவசதி திட்டத்தின் (PPR) கீழ் வீடுகளைப் பெறுவதற்காக சுமார் 3,000 விண்ணப்பதாரர்கள் இன்னும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக கூட்டாட்சி பிரதேசங்கள் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
தலைநகரில் பி.பி.ஆர் (PPR) வீடுகளுக்கான காத்திருப்புப் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்வதாகவும், கோலாலம்பூர் மாநகராட்சியால் (DBKL) நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பி40 (B40) பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கே இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்குள் அமலாக்க அதிகாரிகள் இருந்து உதவிகளை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால், தற்போதைய பி.பி.ஆர் ஒதுக்கீடுகளில் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்த குடும்பங்களுக்காகவும் சில வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, என்று இங்குள்ள பாந்தாய் டலாமில் உள்ள பி.பி.ஆர் ஸ்ரீ பாந்தாய் வீட்டுத் திட்டத்திற்கு வேலை நிமித்தமாக வருகை தந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கோலாலம்பூர் மேயர் பத்லுன் மாக் உஜுத் அவர்களும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் போது காலியாக உள்ள வீடுகளுக்கான பி.பி.ஆர் (PPR) சலுகைக் கடிதங்களை 29 பயனாளிகளுக்கும், கோலாலம்பூரில் உள்ள எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 40 உள்ளூர் வர்த்தகர்களுக்கு Hawker சென்டர் வளாகங்களை ஆக்கிரமிப்பதற்கான சலுகைக் கடிதங்களையும் அமைச்சர் ஹன்னா இயோ வழங்கினார்.
கோலாலம்பூரில் உள்ள அனைத்து பொது வீட்டுவசதி மற்றும் பி.பி.ஆர் (PPR) வீடுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட் நிதியின் கீழ், பி.பி.ஆர் ஸ்ரீ பாந்தாய் வீட்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் ரிங்கிட் செலவிலான பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
-fmt
























