28 வயதான ஒரு கிராப் (Grab) ஓட்டுநர், கடன் கொடுக்கும் கும்பலிடம் (Loan Sharks) இருந்த தனது ரிம 30,000 கடனை பெற்றோர் செலுத்தும்படி செய்வதற்காக, தன்னை கடத்திச் சென்றதாக நாடகமாடிய முயற்சி, எதிர்பாராத ஒரு தவறால் தோல்வியடைந்தது.
காவல்துறையின் ஆலோசனையின்படி, அந்த இளைஞரின் தந்தை, “கடத்தல்காரர்கள்” என்று கூறியவர்களிடம், தனது மகன் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் ஆதாரத்தை கேட்டார். அதற்கு அவர்கள், கார் டிக்கியில் (boot) படுத்திருக்கும் இளைஞரின் புகைப்படத்தை அனுப்பினர்.
ஆனால், அந்தப் புகைப்படம் காவல்துறையினறை நம்ப வைக்கவில்லை. மாறாக, அது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அந்தப் புகைப்படம் உண்மையான பணயக் கைதி (Hostage) புகைப்படமாக இல்லாமல், அவர் தானே எடுத்த செல்ஃபி (Selfie) போலத் தோன்றியதால், அது போலியானது என்று காவல்துறையினர் உடனடியாக சந்தேகித்தனர்.
அதன் பின்னர், காவல்துறையினர் அவரது கைப்பேசி இருப்பிடத்தை (mobile phone location) கண்காணித்து, அவர் ஒரு குறைந்த செலவிலான விடுதியில் (budget hotel) மறைந்து இருப்பதை கண்டுபிடித்தனர்,” என்று எம்சிஏ (MCA) பொதுச் சேவைகள் மற்றும் புகார் பிரிவு தலைவர் மைக்கேல் சோங் (Michael Chong), தெரிவித்தார்.
இந்த நாடகம் ஜூலை 25 அன்று தொடங்கியது. அன்றைய தினம், இளைஞரின் தாயாருக்கு அவரது கைப்பேசியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் தன்னை கடன் கொடுக்கும் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறி, இளைஞரை விடுவிக்க ரிம 30,000 பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்.
MCA பொது சேவைகள் மற்றும் புகார்கள் துறை தலைவர் மைக்கேல் சோங்
பின்னர், இளைஞரின் தந்தை தனது மகனைத் தொடர்புகொண்டபோது, “என்னை கடத்திவிட்டார்கள். கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுகிறார்கள். மீட்புப் பணம் (ransom) கொடுக்காவிட்டால் என்னைக் கொன்றுவிடுவார்கள்,” என்று மகன் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் சிலாயாங் (Selayang) மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மைக்கேல் சோங் கூறுகையில், அவர்கள் காவல்துறை நிலையத்தில் இருந்தபோதும், தந்தைக்கு தொடர்ந்து “கடத்தல்காரர்கள்” எனக் கூறியவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.
பல்லாயிரக்கணக்கான ரிங்கிட் கடன்
காவல்துறை விசாரணையில், கடன் கொடுக்கும் கும்பலே இந்த போலி கடத்தல் நாடகத்தை நடத்தி, பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கும்படி தன்னை கற்றுக்கொடுத்ததாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் மீது மலேசிய தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 385-ன் கீழ் பணம் பறிக்க முயன்ற குற்றத்திற்கும், பிரிவு 417-ன் கீழ் மோசடி செய்த குற்றத்திற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், மைக்கேல் சோங் கூறுகையில், அந்த கிராப் ஓட்டுநர் ஏற்கனவே ரிம 45,000 அளவுக்கு கடன் கொடுக்கும் கும்பலிடம் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் அவரது தந்தையே முழுமையாக அடைத்திருந்தார்.
“அப்போது, இனி ஒருபோதும் கடன் கொடுக்கும் கும்பலிடம் பணம் வாங்கமாட்டேன் என்று அவர் தனது தந்தையிடம் உறுதியளித்திருந்தார்”.
ஆனால், ஜூன் மாத இறுதிக்குள் மீண்டும் அவர்களிடம் கடன் வாங்கியதாகவும், தற்போது அவரது மொத்தக் கடன் சுமார் ரிம 40,000 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
























