பிரீமியர் அபாங் ஜோஹாரி ஓபெங், தாய்லாந்தைப் போல தனது மாநிலமும் அரிசி ஏற்றுமதி செய்யும் பிராந்தியமாக மாற வேண்டும் என்று இப்போது நம்புகிறார்.
சாரவாக் முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங், முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல்லாண்டு நெல் (perennial rice) தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சரவாக், மலேசியாவிலேயே பெரிய அளவில் பல்லாண்டு நெல் (perennial rice) உற்பத்தியைத் தொடங்கிய முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த சாதனையானது சரவாக்கை தாய்லாந்தைப் போல அரிசி ஏற்றுமதி செய்யும் ஒரு பிராந்தியமாக மாற்ற உதவும் ஒரு திருப்புமுனை என்று மாநிலத்தின் பிரீமியர் (Premier) அபாங் ஜோஹாரி ஒபெங் விவரித்துள்ளார்.
புதிய பல்லாண்டு நெல் தொழில்நுட்பம், பிற பிராந்தியங்களுக்கு உபரி அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு முன், மாநிலத்தின் சொந்த தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்று அபாங் ஜோஹாரி கூறியதாக ‘டயாக் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது.
சரவாக் தற்போது தான் நுகரும் அரிசியில் சுமார் 21% மட்டுமே உற்பத்தி செய்கிறது, எஞ்சியது இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், நாம் படிப்படியாக நமது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். உற்பத்தி நமது உள்ளூர் நுகர்வை விட அதிகமாக்கும் பட்சத்தில், நாம் அரிசியை ஏற்றுமதியும் செய்ய முடியும்.
“அநேகமாக சரவாக், இந்த பிராந்தியத்திற்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் மற்றொரு தாய்லாந்தாக மாறக்கூடும்,” என்று அவர் கூறியதாக மேற்கோளிட்டுள்ளளது.
பல்லாண்டு நெல் என்பது மீண்டும் மீண்டும் விதைக்கத் தேவையில்லாமல், ஒவ்வொரு பருவத்திலும் மீண்டும் வளரக்கூடிய நீண்ட ஆயுள் கொண்ட நெல் வகைகளாகும்.
யூனான் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘Borneoland Paddy Sdn Bhd’ நிறுவனம் மேற்கொண்ட இந்த முன்னோடித் திட்டம், மிரியிலுள்ள கோலா பாராமில் தொடங்கப்பட்டது. இந்த கருத்துரு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, தாம் முதலில் சந்தேகமடைந்ததாக அபாங் ஜோஹாரி ஒப்புக்கொண்டார்.
“இன்று, இதன் முடிவுகளை நாம் நமது சொந்தக் கண்களால் பார்த்திருக்கிறோம். இது உண்மையாகவே செயல்படுகிறது.”
இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உணவுத் தொழில், நுகர்வுப் பொருட்கள் மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சு மற்றும் நிலப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் (LCDA) மூலமாக பல்லாண்டு நெல் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், லிம்பாங்-லவாஸ் பள்ளத்தாக்கு, கெடாங், லிங்கா, டாரோ மற்றும் ஜெமோரெங் உள்ளிட்ட பல பகுதிகள் எதிர்கால பல்லாண்டு நெல் சாகுபடிக்காக அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அபாங் ஜோஹாரி கூறினார்.
























