கோலாலம்பூர் நகரின் மையப்பகுதியில் மூன்று குடும்ப உறுப்பினர்களின் மரணத்திற்கு காரணமான, பிளாக் மரியா (Black Maria) வாகனம் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு குடிவரவுத் துறைக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
தனது முகநூல் பதிவில், விபத்தில் உயிரிழந்த 53 வயது நபர் மற்றும் அவரது 25, 12 வயதுடைய இரு மகள்கள் ஆகிய மூன்று பேரின் குடும்பத்தினருக்கு அன்வார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுகுறித்து உடனடியாகவும் விரிவாகவும் விசாரணை நடத்துமாறு நான் குடிவரவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில் ஏதேனும் அலட்சியம் அல்லது சட்ட மீறல் இருப்பது கண்டறியப்பட்டால், எந்தவொரு சமரசமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, சட்டவிரோதக் குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கைக்காகக் குடிவரவுத் துறை லாரி சௌ கிட் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள மாஜு ஜங்ஷன் போக்குவரத்துச் சிக்னலில் அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
43 வயதுடைய குடிவரவுத் துறை அதிகாரியால் ஓட்டப்பட்ட அந்த லாரி, அதன் திசையில் போக்குவரத்துச் சிக்னல் சிவப்பு விளக்காக இருந்தபோது, எச்சரிக்கை விளக்கு மற்றும் சைரன் ஒலியுடன் அந்தச் சந்திப்பிற்குள் நுழைந்துள்ளது.
அப்போது, நேராகச் சென்றுகொண்டிருந்த புரோட்டான் சாகா கார், அந்த லாரியின் மீது மோதுவதைத் தவிர்க்க முடியாமல் அதன் மேல் மோதியது. இதன் விளைவாக, கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த அந்தக் குடும்பத்தினர் மீது மோதியது. இதில் காயமடைந்த தாய் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், விசாரணைக்கு உதவும் வகையில் பிளாக் மரியா மற்றும் புரோட்டான் சாகா வாகனங்களின் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் ஜகாரியா ஷாபான் கூறுகையில், காவல்துறையின் விசாரணைக்குத் துறை முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், அதே வேளையில் வாகன இயக்கத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறை மற்றும் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து உள்வட்டார விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைத் துறை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது, மேலும் அதிகாரிகளின் கண்டுபிடிப்புகள் மற்றும் துறையின் உள்வட்டார விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் துறை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது, என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-fmt
























