~இராகவன் கருப்பையா
ஒருசில இந்துக் கோயில்களில் இன்னும் நிகழ்ந்துவரும் வரம்பு மீறியச் செயல்கள் நமக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நம் சிந்தனைக்கு எட்டாத அநியாயங்களாகவும் உள்ளன.
தெய்வச் சிலைகளுக்கு செலுத்தப்படும் பூமாலைகளில் ‘பீர்’ மதுபானப் ‘போத்தல்’கள் இணைக்கப்பட்டுள்ள காட்சிகள் அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அது மட்டுமின்றி கோயிலில் வழங்கப்படும் அன்னதானம் தொடர்பான அடிதடி காட்சிகளும் நம் சமூகம் வெட்கித் தலை குனியும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளன.
‘பீர்’ மதுபானப் ‘போத்தல்’கள் மற்றும் ‘டின்’களுடன் தொடுக்கப்பட்டிருக்கும் பூமாலைகளை விளம்பரம் செய்யும் வகையில் மாலை வியாபாரி ஒருவர் காணொளி செய்து சமூக வலைத்தளங்களில் அதனை பதிவேற்றும் செய்துள்ளார்.
அதுபோல விதவிதமான மாலைகளை தன்னால் தொடுக்க இயலும் என்றும், நாட்டின் எத்தப் பகுதிக்கும் அவற்றை அனுப்பி வைக்க முடியும் என்றும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிடுகிறார்.
நமது ஞாபகத்திற்கு எட்டிய வரையில் வேறு எந்த மதத்திலும் அவலத்திற்குரிய இத்தகைய அக்கிரமம் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட கேவலமான நிலைக்கு நாமே நம்மை உட்படுத்திக் கொண்டு நம் சமூகத்தையும், சமயத்தையும், நடைமுறைகளையும் மற்றவர்கள் இழிவுபடுத்துவதற்கு வழிக் கொணர்வதைப் போல் உள்ளது.
எந்தக் கோவிலில் இத்தகைய மாலைகளை ஏற்றுக் கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு அசிங்கம் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கிடையே பினேங் மாநிலத்தின் பிராய்(Prai) பகுதியில், ஜாலான் பாருவில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திலும் நீண்ட நாள்களாக அன்னதான குளறுபடிகள் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
:அய்யா கோயில்’ என்று அழைக்கப்படும் அந்த ஆலயம் நாடு தழுவிய நிலையில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு. ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுவது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும்.
கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுவது எவ்வித பாகுபாடுமின்றி யாவருக்கும் பரிமாறப்படும் உணவு என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம். இது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் ஆடுகளை பலி கொடுக்க ஏற்பாடு செய்யும் குடும்பத்தினர் மட்டும்தான் உணவு உட்கொள்ள முடியும் என்றும், அவர்களுக்கு மட்டுமே அந்த பிரத்தியேக அன்னதானம் எனும் வழக்கம் இருப்பதாகவும் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பத்தினர் உட்கொண்ட பிறகு உணவு மீதமிருந்தால் மட்டுமே அது மற்றவர்களுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கோயில் அன்னதானத்திற்கு அங்கு அவர்கள் இப்படி நியாயம் கற்பித்திருப்பது நமக்கு வியப்பாகவும் ஆத்திரமாகவும் உள்ளது. “என்ன கொடுமை சார் இது?” என்று கேட்கத் தோன்றுகிறது.
அண்மையில் அக்கோயிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வின் போது மூண்ட கைகலப்பு இவவிவகாரத்தை பூதாகரமாக்கி நாடு தழுவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தொடர்பில்லாத ஒருவர் உணவு உட்கொண்டதால் அவர் தாறுமாறாகத் தாக்கப்பட்டார் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில் கூறப்படுகிறது.
நம் சமூகத்தைச் சார்ந்த குறிப்பிட்ட ஒரு சாரார் அநாகரீகமற்ற வகையில் இப்படி உணவுக்காக ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு ஒட்டு மொத்த இனத்தையும் அவமானப்படுத்துவதைப் பார்த்தால் நாம் இன்னும் கற்காலத்தில் இருப்பதைப் போல்தான் உள்ளது.
தொன்றுதொட்டு விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற நம் சமூகத்தில் இவ்வாறான விரும்பத் தகாத நிகழ்வுகளைக் காண்பது நமக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது
எனவே இத்தகைய ஒரு நடைமுறை அக்கோயிலில் வழக்கமான ஒன்றுதான் என்றிருந்தால், இப்படிப்பட்ட ஒரு அன்னதானத்தை சம்பத்தப்பட்ட குடும்பத்தினர் தங்களுடைய இல்லங்களிலோ வேறு தனிப்பட்ட இடங்களிலோதான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமேத் தவிர கோயில் போன்ற ஒரு பொதுவான இடத்தில் அல்ல.
வழக்கம் போல, பூனைக்கு யார் மணி கட்டுவது எனும் நிலைப்பாடுதான் மீண்டும் எழுந்துள்ளது.
























