இராகவன் கருப்பையா
நம் நாட்டில் ‘மேகா’ ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி நீதிமன்றங்களுக்கு அழைக்கப்படுபவர்கள், குறிப்பாக அரசியல்வாதிகள், திடீரென நோய்வாய்படுவது விசித்திரமான ஒரு தோற்றப்பாடாக உள்ளது.
நன்றாகத்தான் இருப்பார்கள். ஆனால் பூர்வாங்க விசாரணை முடிந்து குற்றச்சாட்டை எதிர்நோக்க நீதிமன்றம் வர வேண்டும் என அழைக்கப்படும் போது திடீரென சக்கர நாற்காலியில் வருவார்கள், ஊன்று கோலின் துணை கொண்டு நொண்டி தொண்டி நடந்து வருவார்கள் அல்லது ஏதாவது ஒரு மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்வார்கள்.
மருத்துவமனையில் அனுமதித்துக் கொண்ட பிறகு தங்களுடைய வழக்கறிஞர்கள் வாயிலாக வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க ஏற்பாடு செய்வார்கள். வேறு வழியின்றி நீதிமன்றமும் அதற்கு ஒப்புதலளிக்கிறது.
ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் மட்டும்தான் இத்தகைய நிலைப்பாடா அல்லது மற்ற நாடுகளிலும் இப்படிப்பட்ட ‘டிராமா’ அரங்கேறுகிறதா என்று தெரியவில்லை.
உண்மையிலேயே திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளது என்று தொடக்கத்தில் நாம் எண்ணி ஏமாந்த காலம் உண்டு. ஆனால் நாளடையில் நிறைய பேர் இதே யுக்தியை கையாண்ட போது, இது அவர்களுடைய ‘மேகா டிராமா’வில் ஒரு பகுதிதான் என மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.
இத்தகைய சித்து விளையாட்டுக்களைக் கொண்டு எவ்வளவு நாள்களுக்குத்தான் நீதியின் பிடியில் இருந்த தப்ப முடியும்? கண்டிப்பாக முடியாது. நீதியின் நீண்டக் கரங்கள் அவர்களை சும்மா விடாது. எப்படியாவது கவ்விப் பிடித்துவிடும்.
அவர்களுடைய நடத்தை ஒரு ‘டிராமா’தான் என்று தெரிந்தும் வேறு வழியின்றி அவர்களுக்குப் பரிவு காட்டி நீதிமன்றம் அவகாசம் வழங்கினாலும், ‘சிகிச்சை’ முடிந்தவுடன் அல்லது ‘நோய் குணமடைந்த’ பிறகு நீதிமன்ற வாசலுக்கு அவர்கள் வரத்தான் வேண்டும்.
இத்தகைய மலிவான யுக்திகளைக் கொண்டு யாரை அவர்கள் ஏமாற்ற முனைகிறார்கள் என்று தெரிவில்லை. ஆனால் கடைசியில் அது அவர்களுக்குத்தான் அவமானத்தைக் கொண்டு வருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஏனென்றால் அண்மைய காலமாக இத்தகையச் செயல்களை பொது மக்கள் ஒரு கேலி கூத்தாக எண்ணி எல்லி நகையாடுகின்றனர். அனுதாபத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் அவர்கள் பொது மக்களையோ நீதியையோ ஏமாற்ற முடியாது என்று தெரிந்திருக்க வேண்டும்.
இவர்களுடைய ‘டிராமா’க்களை நன்கு உணர்ந்துள்ள நீதிபதிகள், “அடுத்த முறை சாக்கு போக்குச் சொல்லாமல் அவசியம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்,” எனும் ஆணையையும் சில சமயங்களில் பிரப்பித்திருக்கின்றனர்.
இத்தகைய ‘டிராமா’க்களுக்கு அரசியல்வாதிகள்தான் பலே கில்லாடிகள் என்று எண்ணியிருக்கும் நமக்கு ஒரு சில தொழிலதிபர்களின் போக்கும் வேடிக்கையாகத்தான் உள்ளது. அவர்களும் கூட இதே பாணியிலான யுக்தியைக் கையாள்வதை அவ்வப்போது நாம் பார்க்கிறோம்.
இதற்கிடையே, நீதிமன்ற அழைப்பு வந்தவுடன் இயல்பாகவே உடல் சுகவீனம் அடைபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் எனும் உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஏற்கெனவே அவர்கள் உடல் நலம் குன்றியவர்களாக இருக்கக் கூடும் அல்லது நீதிமன்ற அழைப்பு வந்தவுடன் ஏற்பட்டும் திடீர் அதிர்ச்சியில் நெஞ்சு வலி, இருதயத் கோளாறு போன்ற உபாதைகளுக்கு அவர்கள் உட்படக் கூடும்.
எனவே ‘தோண்டத் தோண்ட ஊறும் கிணறு’ போல அனுதினமும் ‘மேகா’ ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் நம் நாட்டில் இதுபோன்ற ‘டிராமா’க்களுக்கும் தொடர்ந்தாற் போல் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.
























