நெருக்கடியான எஃப்1 (F1) பந்தயக் கால அட்டவணை மற்றும் தற்போது பந்தயங்களை நடத்தும் நாடுகளுடனான ஒப்பந்தக் கடப்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ஃபார்முலா 1 மலேசிய கிராண்ட் பிரீ பந்தயத்தை மீண்டும் கொண்டு வருவதற்குச் சில காலம் பிடிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் செப்பாங் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்ற பஹ்ரைன் கிராண்ட் பிரீ பந்தயத்திற்கு முன்னதாக, எஃப்1 அமைப்பின் தலைவர் ஸ்டெபானோ டொமினிகாலியுடன் நடத்திய சந்திப்பில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தாம் விவாதித்ததாக அவர் கூறினார்.
மலேசிய கிராண்ட் பிரீ பந்தயத்தை மீண்டும் எஃப்1 கால அட்டவணையில் ஒரு நிரந்தர அங்கமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம், இதன் மூலம் செப்பாங்கிற்கு அது திரும்புவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்ற முடியும், என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அமைச்சரவை விரிவாக விவாதிக்கும் என்றும், இந்த உலகளாவிய பந்தயத்தை நடத்துவதற்கான நாட்டின் நிதி மற்றும் உள்கட்டமைப்புத் திறன் குறித்தும், இதனால் பொருளாதாரம் மற்றும் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் அன்வார் கூறினார். முன்னதாக, எஃப்1 கால அட்டவணையில் மலேசியா ஒரு நிரந்தர இடத்தைப் பெற வேண்டுமானால் அதற்கு ஆண்டுக்கு 300 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என செப்பாங் சுற்றுவட்டார அதிகாரி ஒருவர் மதிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் காரணமாக ஆரம்பத்தில் ரத்து செய்யப்பட்டு, பின்னர் மலேசியாவில் தற்காலிகமாக நடத்தப்பட்ட பஹ்ரைன் கிராண்ட் பிரீ பந்தயத்தைக் காண்பதற்காகப் பிரதமர் இன்று செப்பாங் வந்திருந்தார். அப்போது எஃப்1 பந்தய வர்ணனையாளர் மார்ட்டின் பிரண்டிலுக்கு அளித்த நேர்காணலில், நிச்சயமாக, நான் இதனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்” என்று அன்வார் தெரிவித்தார்.
மெர்சிடிஸ் அணியின் கிமி ஆண்டோனெல்லிக்கு இரண்டாவது இடத்திற்கான கோப்பையை அன்வார் வழங்கினார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு செப்பாங் களத்திற்குத் திரும்பிய ரெட்புல் ரேசிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றார். மூன்றாவது இடத்தை ஃபெராரி அணியின் லூயிஸ் ஹாமில்டன் பிடித்தார்; இவர் இதற்கு முன்பு மெர்சிடிஸ் அணியில் நிகி ரோஸ்பர்க்குடன் இணைந்து ‘ஒன்-டூ’ (முதல் இரு இடங்கள்) வெற்றியைப் பெற்றபோது, எட்டு முயற்சிகளுக்குப் பிறகு 2014-இல் செப்பாங்கில் முதன்முறையாக வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வந்த செலவுகள் மற்றும் குறைந்து வந்த வருவாய் காரணமாக, 18 ஆண்டுகாலத் தொடரோட்டத்திற்குப் பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு மலேசிய கிராண்ட் பிரீ பந்தயம் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பிறகு செப்பாங்கில் நடைபெற்ற முதல் எஃப்1 (F1) பந்தயம் இந்த வார இறுதிப் போட்டியாகும். இந்தப் போட்டிக்கான முழுச் செலவையும் பஹ்ரைன் ஏற்றுக்கொண்ட வேளையில், மலேசியா இதற்கான ஆயத்தப் பணிகளுக்காக 10 மில்லியன் ரிங்கிட் முதல் 16 மில்லியன் ரிங்கிட் வரை மட்டுமே செலவிட்டது.
-fmt
























