மலேசியாவின் ஒரே சீனா கொள்கையானது அன்றைய பிரதமர் துன் அப்துல் ரசாக் உசேன் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, அதில் தற்போதும் எந்த மாற்றமும் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்துள்ளார்.
தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை மலேசியா மதிப்பதாகக் குறிப்பிட்ட அன்வார், அமைதியான முறையில் தீர்வுகாண்பதே இதற்கான சிறந்த வழி என்றும் நம்புவதாகக் கூறினார்.
ஒரே சீனா கொள்கையானது துன் அப்துல் ரசாக் காலம் முதற்கொண்டே பின்பற்றப்படுகிறது. என் பார்வையில், இந்தக் கொள்கை அப்படியே நீடிக்கிறது. நாம் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறோம், அதே வேளையில் நிச்சயமாக இதற்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம், என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரபல அல் ஜசீரா ஊடகத்திற்கு அண்மையில் அளித்த நேர்காணலில், தைவான் விவகாரம் குறித்து தாம் வெளியிட்ட கருத்துகளுக்கு தைவான் தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
அந்த நேர்காணலில், தாம் தைவானை சீனாவின் ஒரு பகுதியாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், அது ஒரே சீனாதான். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர், என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அன்வாரின் இந்தக் கருத்து பெய்ஜிங்கின் (சீனா) பாராட்டைப் பெற்ற அதே வேளையில், தைவானின் கண்டனத்திற்கு உள்ளானது. சீனாவுக்கு அன்வார் அளிக்கும் இந்த “ஒருதலைப்பட்சமான ஆதரவு, மலேசியாவில் முதலீடு செய்யும் தைவான் நிறுவனங்களின் நம்பிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் தைவான் எச்சரித்துள்ளது.
இருப்பினும், தனது நிலைப்பாடு மலேசியாவின் நீண்டகாலக் கொள்கைக்கு உகந்ததாகவே இருப்பதை அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார். ஆனால், அல் ஜசீரா ஊடகம் தனது கருத்துக்களை வெளியிட்ட விதம் இத்தகைய எதிர்மறையான வினையைத் தூண்டியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி மற்றும் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோர் தலைமையிலான குழு இதுகுறித்து விவாதிக்கும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.
அதுகுறித்து அந்தக் குழுதான் விவாதிக்க வேண்டும். இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கு நம்மிடம் அமிருடின் மற்றும் சைபுடின் இருக்கிறார்கள், என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியுடன் தங்கள் கூட்டணி அமைத்திருந்ததைப் போல, மலாக்கா தேர்தலிலும் அது தொடரும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் அகமத் ஜாஹித் ஹமிடி கூறியிருந்தார்.
இருப்பினும், பாரிசான் தரப்பு பக்கத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்றுவதற்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளதாகவே தெரிகிறது; அதே வேளையில், பாரிசான் – பெரிகாத்தான் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
-fmt
























