அரசு, GST-யின் அடிப்படைக் கொள்கையை பரிசீலிக்காது; ஆனால் SST-யில் மாற்றங்களைச் செய்வது குறித்து திறந்த மனதுடன் உள்ளது – பிரதமர்

மலேசிய அரசாங்கம் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) என்ற பரந்த அடிப்படையிலான வரியின் அடிப்படைக் கொள்கையை பரிசீலிக்காது என்றும், அதேவேளை விற்பனை மற்றும் சேவை வரி (SST) நடைமுறையை மேம்படுத்துவதற்கான மாற்றங்களைச் செய்வது குறித்து திறந்த மனதுடன் இருப்பதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சருமான அன்வார், GST-யின் சில அம்சங்களை அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்றும், ஆனால் அதன் அடிப்படைக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறினார். ஏனெனில், GST என்பது பரந்த அடிப்படையிலான வரியாக இருந்து, ஏழைகள் உட்பட ஒவ்வொரு குடிமகனிடமும் வரி வசூலிக்கும் தன்மை கொண்டது என அவர் விளக்கினார்.

“GST-யின் அடிப்படை அம்சத்தை நான் பரிசீலிக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அது இன்னும் பரந்த அடிப்படையிலான வரியாகவே உள்ளது. ஏழைகள் உட்பட ஒவ்வொரு குடிமகனிடமும் வரி விதிக்கப்படும்.

“எனவே, அந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும்,”

என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற TikTok Shop Summit 2026 நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, நுகர்வு வரி முறையை மேலும் முன்னேற்றமானதாகவும் திறமையானதாகவும் மாற்றுவதற்காக அரசாங்கம் சீர்திருத்தங்களைப் பரிசீலித்து வருவதாக அன்வார் அறிவித்திருந்தார். இதில் பரந்த அடிப்படையிலான GST-யின் சில அம்சங்களை மீண்டும் அறிமுகப்படுத்தும் சாத்தியமும் அடங்கும்.

இந்த விவகாரம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக மின்னணு பணப்பரிவர்த்தனைகளுக்கு வரி விதிப்பது மற்றும் நிதி இலக்குகளை அடைவதற்காக GST-யை மீண்டும் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டு, வாழ்க்கைச் செலவு அதிகரித்ததற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தியைத் தொடர்ந்து, மலேசியா GST முறையிலிருந்து விலகி மீண்டும் SST முறையை நடைமுறைப்படுத்தியது.

அன்வார் மேலும் கூறுகையில், மடானி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை மிகவும் ஏழையான மக்களின் மீது கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதாகும்.

SST நடைமுறையை மேம்படுத்தும் வகையில் சில மாற்றங்கள் தேவையா அல்லது GST-யின் சில அம்சங்களைச் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து நிச்சயமாக நாம் பரிசீலிக்கலாம்.

“ஆனால் இந்த மடானி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கை மிகவும் ஏழையான மக்களின் மீது கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதாகும். எனவே, GST-யின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது,”

என்று அவர் மேலும் தெரிவித்தார்.