விஜய், அன்வாரை ஏன் சந்திக்கவில்லை – ஓர் அலசல்

இராகவன் கருப்பையா – தமிழக முதல்வர் விஜய்யை இவ்வாரம் சந்திக்கத் திட்டமிட்டிருந்த பிரதமர் அன்வாரின் முயற்சி நிறைவேறாமல் போனது பலதரப்பட்ட யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் ‘ப்ரிக்ஸ்’ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள அன்வார், வரும் வழியில் சென்னை சென்று விஜய்யை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அதே காலக்கட்டத்தில் ஐரோப்பிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு விஜய்  லண்டன் பயணமாகிறார் எனும் தகவல் மலேசியர்களுக்கு, குறிப்பாக நம் சமூகத்தைச் சார்ந்த ஒரு சாராருக்கு ஆச்சரியம் கலந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போல் தெரிகிறது.

கடந்த மே மாதத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த போது அன்வார் தனது திட்டத்தை அவரிடம் எடுத்துரைத்தார்.

அதற்கு அடுத்த மாதத்தில் சென்னை சென்ற ஒற்றுமைத்துறை துணையமைச்சர் யுனேஸ்வரன், அன்வாரின் கடிதம் ஒன்றையும் விஜய்யிடம் ஒப்படைத்தார்.

மலேசியாவுக்கு வருகை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் விவரங்களும் அக்கடிதத்தின் உள்ளடக்கங்களில் அடங்கும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாரம் சென்னையில் சந்திப்பதற்கான அன்வாரின் கோரிக்கைக்கு விஜய்யின் அலுவலகம் தெளிவான பதிலுரைக்காதது ஏமாற்றமளிப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

இத்தகையச் சுழலில் தமிழ்நாட்டிலுள்ள பல வலையொளியாளர்களும் இதர சமூக வலைத்தளவாசிகளில் சிலரும் ஏகப்பட்ட யூகங்களை வெளியிட்டவாறு இருக்கின்றனர்.

விஜய்க்கு மலேசியாவில் மிகப்பெரிய ஆதரவு இருப்பதாகவும், இந்நாட்டில் தேர்தல் நடக்கவிருப்பதால் அவரை இங்கு அழைத்து வந்து நம் சமூகத்தினரின் ஆதரவை மீண்டும் திரட்டுவதற்கு அன்வார் முயற்சிப்பதாகவும் ஒரு பதிவு குறிப்பிடுகிறது.

மலேசிய இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை அன்வார் நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதனால் விஜய் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் மற்றொரு பதிவு குறிப்பிட்டது.

இங்குள்ள இந்து கோயில்களுக்கு எதிரான அன்வாரின் கருத்துக்களினாலும் நடவடிக்கைகளினாலும் விஜய் சற்று கோபமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாகத்தான் சென்னை சந்திப்பை அவர் வேண்டுமென்றே தவிர்த்ததாகவும் கூட பிரிதொரு காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக, பலதரப்பட்ட யூகங்கள்   பகிரப்பட்டு வருகிற போதிலும், உண்மை நிலவரம் தெரியாமல் எந்த ஒரு பதிவும் ‘மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு’ போட்டக் கதையாக இருக்கக் கூடாது என்பதே நமது நிலைப்பாடு ஆகும்.

சுமார் 77 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழ் நாட்டை ஆட்சி புரிவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எனவே அன்வாருக்காக நேரம் ஒதுக்குவதில் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.