நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பு ஊழலுக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தாது – அன்வார்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை பொதுமன்னிப்பு, அனைத்து வகையான ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்திற்கு இருக்கும் உறுதியை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மாறாமல் இருப்பதாகவும், முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட தற்போதைய வழக்குகள் உட்பட அனைத்து ஊழல் வழக்குகளும் சட்டத்தின்படி தொடர வேண்டும்.

இறுதியாக, அரசியலமைப்புச் சட்டம் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு (யாங் டி-பெர்துவான் அகோங்) முழுமையான அதிகாரங்களை வழங்குகிறது. எனவே, இந்த முடிவை நாம் நேர்மறையான வழியில் ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன் என்று அன்வார் கூறினார்.

அதற்கும் மேலாக, சட்டத்தின் ஆட்சி மாறாமல் அப்படியே இருக்கிறது என்பதையும், அனைத்து ஊழல்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் எங்களின் முடிவு எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த முடிவானது நாடு பணமோசடி மற்றும் ஊழலுக்கு அடிபணிய வேண்டும் என்று அர்த்தமல்ல, என்று புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டு, எஞ்சியிருக்கும் சிறைத் தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் நிபந்தனை பொதுமன்னிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டாட்சிப் பிரதேசங்கள் மன்னிப்பு வாரியத்தின் 64-வது கூட்டத்தைத் தொடர்ந்து, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இந்த நிபந்தனை பொதுமன்னிப்பை வழங்கியதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 12 ஆண்டு கால அசல் சிறைத் தண்டனையை, கடந்த 2024 பிப்ரவரியில் மன்னிப்பு வாரியம் பாதியாகக் குறைத்ததைத் தொடர்ந்து, 73 வயதான அவர் காஜாங் சிறையில் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 210 மில்லியன் ரிங்கிட் அசல் அபராதத் தொகையும் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவரது இறுதிக்கட்ட மேல்முறையீட்டை கூட்டாட்சி நீதிமன்றம்  தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் 2022 ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

 

 

 

-fmt