மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகம்), மியான்மர் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை விமர்சிப்பதில் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்துள்ளது.
மியான்மரில் உள்நாட்டுப் போர் இன்னும் தொடர்ந்து வருவதாகவும், அங்கு வன்முறை நீடிப்பதோடு மனித உரிமை நிலவரம் மேலும் மோசமடைந்து வருவதாக ஐநா சபை தெரிவித்துள்ளதாகவும் சுஹாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அகதிகள் தங்களின் சொந்த நாட்டில் துன்புறுத்தல், சித்திரவதை அல்லது பிற கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் உண்மையான ஆபத்து இருந்தால், அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என்பது மரபுவழி சர்வதேச சட்டமாகும் என்றும் அது கூறியுள்ளது.
மரபுவழி சர்வதேச சட்டத்தின் ஒரு கோட்பாடு என்ற முறையில், இந்த விதி ஒரு நாடு அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும். இதன் பொருள், மலேசியா அகதிகள் உடன்படிக்கையில் ஒரு தரப்பாக இல்லாதபோதிலும், இந்த கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது.
எனவே, ஒரு அகதி அல்லது புகலிடம் கோருவோரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் அவர்களின் இனம், மதம், தேசிய இனம், ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் உறுப்பினர் என்ற தகுதி அல்லது அரசியல் கருத்து ஆகியவற்றின் காரணமாக அச்சுறுத்தப்படும் நியாயமான ஆபத்து இருந்தால், அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப மலேசியாவிற்கு சர்வதேச சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்த முதன்மையான கோட்பாட்டை மீறுவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று அந்த ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று மலேசியா மியான்மர் அகதிகள் திருப்பி அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கியது. இதில் சுமார் 5,000 மியான்மர் அகதிகள் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் ஏறத்தாழ 1,476 பேர் மியான்மரின் மூன்று கடற்படைக் கப்பல்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, இதில் 20 சிறுவர்கள் மற்றும் 7 சிறுமிகள் உட்பட 27 குழந்தைகளும் அடங்குவர்.
இந்த அகதிகள் திருப்பி அனுப்பும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மலேசியா மேலும் 3,524 மியான்மர் குடிமக்களை திருப்பி அனுப்பவுள்ளது. இதற்கான தேதி மியான்மரால் இன்னும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட அகதிகள் தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்ப தாங்களாகவே முன்வந்துதான் முடிவெடுத்ததாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இருப்பினும், சுஹாகம் இதனை கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், மியான்மரில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சூழ்நிலைகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களா, மற்றும் எந்தவொரு அழுத்தமும் அல்லது கட்டாயமும் இன்றி இது நடந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
தாங்களாகவே முன்வந்து எடுக்கும் இத்தகைய முடிவுகள் குடியேற்றத் துறையால் அல்லாமல், ஐநா அகதிகள் முகமை (UNHCR) போன்ற ஒரு சுதந்திரமான அமைப்பினால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
ஒவ்வொரு நபரின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அவர்கள் திரும்பும்போது எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகள் குறித்து ஒரு சுதந்திரமான அமைப்பால் முறையான மதிப்பீடு செய்யப்படாமல், மியான்மருக்கு மேலும் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சுஹாகம் வலியுறுத்துகிறது.
பாதுகாப்பு தேவைப்படுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதற்கு, சம்பந்தப்பட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளுக்குப் தகுந்த அனுமதி வழங்கப்பட வேண்டும், என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் போது குழந்தைகளின் நலன்களுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அகதி குழந்தைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு குழந்தையையும் ஆபத்தான சூழ்நிலைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது. அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுஹாகம் கூறியுள்ளது.
-fmt
























