டாக்டர் மகாதீர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, இன்று காலை தேசிய இதய நிறுவனம் (IJN) மருத்துவமனையிலிருந்து வெளியேறி, புத்ராஜெயாவில் உள்ள புசாரா நெகாராவில் தனது மறைந்த மனைவி டாக்டர் ஹஸ்மா அலியின் கல்லறைக்குச் சென்றார். எனினும், அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரித்தா ஹரியான் செய்தியின்படி, காலை 11.05 மணியளவில் குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு வந்த மகாதீர், கல்லறையில் பிரார்த்தனை செய்தபோது கண்ணீர் சிந்தியதுடன், ரோஜா இதழ்களையும் தூவினார்.
அங்கு சுமார் 15 நிமிடங்கள் இருந்த அவர் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கைக்குப் பிறகு, ஹஸ்மா கடந்த திங்கட்கிழமை காலமானார். அவருடைய மறைவுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு மகாதீர் இந்த வருகையை மேற்கொண்டார்.
மனைவியின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக மகாதீர் மிகவும் சோர்வடைந்திருந்ததாக அவரது பத்திரிகைச் செயலாளர் சுஃபி யூசோஃப் முன்னதாக தெரிவித்திருந்தார்.
MACC
முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணனின் 12 வயது மகனுக்கு சொத்து விவரங்களை அறிவிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) எந்த அறிவிப்பையும் வழங்கவில்லை என்று அதன் தலைவர் அப்துல் ஹலீம் அமானி மறுத்துள்ளார்.
பெரித்தா ஹரியான் செய்தியின்படி, உறவினர்கள் அல்லது தொடர்புடைய நபர்களுக்கான வயது வரம்பை சட்டம் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தக் குழந்தையின் விஷயத்தில் MACC தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முடிவு செய்ததாக ஹலீம் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் இன்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டதாவது:
“அவரது 12 வயது மகனுக்கு அறிவிப்பு வழங்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். உண்மையில், அவருக்கு எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.”
12 வயது சிறுவன் MACC அலுவலகத்துக்கு வந்தது தனது பெற்றோருடன் துணையாக வந்ததற்காக மட்டுமே என்றும், அறிவிப்பைப் பெறுவதற்காக அல்ல என்றும் ஹலீம் தெரிவித்தார்.
சொத்து விவரங்களை அறிவிக்கும் அறிவிப்புகள், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 36(2)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் இணங்க வேண்டும். நியாயமான காரணங்கள் இருந்தால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம்.
ரிம 2.1 பில்லியன் அதிகப்படியான செலவு குற்றச்சாட்டு
ஊரக மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ரிம 2.1 பில்லியன் அளவுக்கு அதிகமாக செலவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக MACC-க்கு இதுவரை அதிகாரப்பூர்வ புகார் எதுவும் கிடைக்கவில்லை என்று ஹலீம் தெரிவித்துள்ளார்.
பெர்னாமா செய்தியின்படி, அந்த அமைச்சகத்தை வழிநடத்தும் துணைப் பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை ஊடகச் செய்திகளின் மூலமாக மட்டுமே MACC அறிந்ததாக ஹலீம் கூறினார்.
இதைப் பற்றி ஊடகங்களில் மட்டுமே படித்துள்ளோம். இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கிடைக்கவில்லை. எனவே, நான் கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
“எங்களிடம் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டவுடன், நிச்சயமாக விசாரணையில் இறங்குவோம்.”
நேற்று, DAP ஆலோசகர் லிம் குவான் எங் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக MACC நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, அரசாங்கம் அங்கீகரித்த ஒதுக்கீட்டை அமைச்சகத்தின் செலவுகள் மீறாது என்று ஜாஹித் முன்னதாக கூறியிருந்தார்.
மாணவர் கொலை
குவாலா பிலாவில் உள்ள ஒரு பள்ளியில் தனது 14 வயது சக மாணவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட Form Four மாணவருக்கு மேலும் ஏழு நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் அக்டோபர் 8ஆம் தேதி வரை காவலில் வைக்கப்படுவார்.
தி ஸ்டார் செய்தியின்படி, சந்தேகநபரின் ஆரம்ப தடுப்புக் காவல் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று குவாலா பிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் காவலை நீட்டிக்க உத்தரவிட்டதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத் தெரிவித்தார்.
இதுவரை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட70 பேரிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் அல்சாஃப்னி கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளியில் தன்னை யாராவது துன்புறுத்துவதாக ஒருபோதும் புகார் தெரிவித்ததில்லை என்று அவரது பெற்றோர் விசாரணையாளர்களிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர் தங்கியிருந்த அதே விடுதிக் கட்டிடத்தில் வசித்த மற்றொரு Form Four மாணவர், விசாரணைக்கு உதவுவதற்காக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் சனிக்கிழமை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
























