தற்போதைய அரசியல் பல்லில்லா புலியானது ஜ.செ.க.

இராகவன் கருப்பையா

அண்மைய காலமாக நம் நாட்டில் நிகழ்ந்துவரும் பல சம்பவங்கள் ஜ.செ.க. கட்சிக்கு மிகப் பெரிய சோதனைகளை எற்படுத்தி வருவதை நம்மால் காணமுடிகிறது.
கடந்த காலங்களில் மக்கள் நலனுக்காக உக்கிரமாகக் கர்ஜித்த அக்கட்சியின் செயல்பாடுகள் தற்போது ‘பல்லில்லா புலி’யைப் போல் இலக்கை இழந்து தடுமாறிக் கொண்டிருப்பதை மக்கள் உணராமல் இல்லை.
சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் அது அடைந்த படுதோல்வியைத் தொடர்ந்து ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களிலும் அக்கட்சி ‘பதத்துப் போன மத்தாப்பைப் போல்’ ஆகிவிட்டது.

ஒரு காலத்தில் அரசாங்கத்தில் வலுவான குரலாக ஒலித்த ம.சீ.ச.வுக்கு பதிலாக ஜ.செ.க. விளங்கும் அன்று எதிர்பார்த்த மக்களுக்கு, தற்பொழுது அதன் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுக்கின்றன என்பதை அந்த தேர்தல் முடிவுகள் புலப்படுத்திவிட்டன.
சிலாங்கூர் மாநிலத்தில் பன்றிப் பண்ணைகள் தொடர்பான விவகாரமும் அக்கட்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மக்களின் அதிருப்தியை உணர்ந்த அதன் தலைவர்கள், அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு சிறப்புக் பொதுக் கூட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட்டினார்கள்.
‘அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டாம்,’ என பெரும்பாலோர் வாக்களித்த போதிலும், குறைவான எண்ணிக்கையுடைய உறுப்பினர்களைக் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டது என ஒரு சாரார் குறை கூறினார்கள்.

ஆகக் கடைசியாக அக்கட்சிக்கு சோதனையாக அமைந்தது முன்னாள் பிரதமர் நஜிபின் வீட்டுக் காவல் விவகாரம்.

‘உலக மகாத் திருடன்’ என்று வர்ணிக்கப்பட்ட அவருக்கு 2 முறை பரிவு காட்டப்பட்டது, நாடலாவிய நிலையில் பல்வேறு தரப்பினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது ஏதோ உண்மைதான். அம்னோவைச் சேர்ந்த குறிப்பிட்டச் சிலர் மட்டுமே வேண்டா வெறுப்பாக அம்முடிவிற்கு ஆதரவளிப்பதைப் போல் தெரிகிறது.

‘இனிமேலும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை,’ என சீற்றமடைந்த ஜ.செ.க. தலைவர்கள், அது குறித்து தீர்க்கமாக ஒரு முடிவெடுக்க வேண்டும் என மீண்டும் கூடினார்கள்.

ஆனால் அந்தக் கூட்டமும் ஒரு ‘புஸ் வானமாகத்தான்’ முடிவடைந்தது. என்னதான் கூடிப் பேசி முடிவெடுத்தார்களோ தெரியவில்லை, அதன் தலைமைச் செயலாளர் எந்தனி லோக் மட்டுமே தனது அமைச்சர் பதவியைத் துறப்பார் என அறிவிக்கப்பட்டது.

அந்த ‘வலுவிழந்த’ முடிவுக்கு ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும் ஒருவர் மட்டுமே பதவி விலகினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,’ எனும் நிலைப்பாடுதான்.

அந்த நாற்காலியில் அமருவதற்கு இந்நேரம் பலர் வரிசை பிடித்து நிற்பார்கள் என்பதுதான் மலேசிய அரசியலின் நிதர்சனமான உண்மை.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு எதிர்கட்சியைப் போல் நடந்து கொள்ள முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும். இருந்த போதிலும் ஊமைகளாக காலம் கடத்துவதுதான் நமக்கு ஏமாற்றமளிக்கிறது.

ஆக, ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை,’ எனும் நிலைப்பாட்டிலான இவர்களுடைய இத்தகையத் தொடர் ‘டிராமா’வினால் மக்கள் சலிப்படையத் தொடங்கிவிட்டனர்.

ஐ.செ.க.வின் முன்னாள் தலைவர்களான கர்ப்பால் சிங், வி.டேவிட் மற்றும் பி.பட்டு போன்றவர்களின் ஆக்ககரமானத் தலைமைத்துவத்தின் கீழ் கோலோச்சிய அதனை இனி எப்போ காண்பது என அதன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருப்பதில் நியாயம் உள்ளது.