சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை, நிரந்தரப் பணியிடங்கள் மற்றும் ஊதியத் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உண்மையான அதிகாரம் வழங்கப்படாவிட்டால், சுகாதார சேவைகள் ஆணையத்தை (Health Services Commission) அமைப்பதால் சுகாதாரத் துறையில் பணியாற்றுவோருக்கு எந்தவொரு அர்த்தமுள்ள மாற்றமும் ஏற்படாது என்று டிஏபி செனட்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், சுகாதார அமைச்சின் அணுகுமுறை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஆணையத்தை அமைப்பதில் அமைச்சு தொடர்ந்து உறுதியாக இருந்தாலும், அந்த அமைப்புக்கு உண்மையான அதிகாரம் இருக்காது என்பதை அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“2023ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். முக்கியமான அதிகாரங்கள் பொதுச் சேவைத் துறை (Public Service Department) மற்றும் நிதி அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே இருக்குமானால், இந்த ஆணையத்தின் நோக்கம்தான் என்ன?
இந்த ஆணையம் வெறுமனே மனிதவள நிர்வாக அமைப்பாக மட்டும் செயல்படக் கூடாது. அதன் செயல்பாட்டு வரம்பு விரிவானதாகவும், சுகாதார வெள்ளை அறிக்கையின் (Health White Paper) சீர்திருத்த இலக்குகளுடன் ஒத்துப்போவதாகவும் இருக்க வேண்டும்.
“மனிதவளத் திட்டமிடல், பணியாளர் பற்றாக்குறை, நிரந்தரப் பணியிடங்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் ஒட்டுமொத்த நலன் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் அது செயல்பட வேண்டும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கேப்லி அகமட்
இதற்கிடையில், சுகாதார சேவைகள் ஆணையத்தை அமைப்பதில் அமைச்சு உறுதியாக இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கேப்லி அகமட் நேற்று மக்களவையில் (Dewan Rakyat) மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த ஆணையத்துக்கு, சுகாதாரப் பணியாளர்கள் எதிர்பார்த்த அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
வெறும் அறிவிப்புகள் அல்ல, தீர்வுகளே தேவை
2023ஆம் ஆண்டு முதல், ஒப்பந்த மருத்துவர்களின் அமைப்பான ஹர்தால் டாக்டர் கொன்ட்ராக் (Hartal Doktor Kontrak), சுகாதார சேவைகள் ஆணையம் மற்றும் சுகாதார சீர்திருத்த ஆணையம் ஆகிய இரண்டையும் விரைவாக அமைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு வருகிறது.
மலேசியாவில் சுகாதாரப் பணியாளர்களின் வேலைப் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த நலனையும் உறுதிப்படுத்துவதற்கு இத்தகைய ஆணையங்கள் மிகவும் அவசியமானவை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு வாக்கில், ஹர்தால் டாக்டர் கொன்ட்ராக் இயக்கத்தின் ஒரு பகுதியாக கிள்ளான் மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவர்கள் நடத்திய போராட்டம்.
“நானும் ஒரு மருத்துவர், முன்னாள் மருத்துவமனை இயக்குநர் என்ற முறையிலும், சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுள்ளேன். அவர்களுக்குத் தேவை தீர்வுகளே தவிர, வெறும் அறிவிப்புகள் அல்ல,” என்று லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
இதனைக் கருத்தில் கொண்டு, முன்மொழியப்பட்டுள்ள ஆணையம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்படுவதற்கு முன்னரே, அதற்குப் பொருத்தமான பொறுப்புகளும் சட்டப்பூர்வ அதிகாரங்களும் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அவர் சுல்கேப்லி அகமட்டை வலியுறுத்தினார்.
நீண்டகாலமாக சுகாதாரத் துறையைப் பாதித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனின்றி, பெயரளவில் மட்டுமே இயங்கும் ஓர் அமைப்பை உருவாக்குவதற்காகப் பொதுமக்களின் நிதியும் நேரமும் வீணடிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“சுகாதாரப் பணியாளர்களுக்கு உண்மையான சீர்திருத்தமே தேவை; அதிகாரமற்ற ஓர் ஆணையம் அல்ல,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
























