அமைச்சகம் நடத்திய ஆய்வில், கைமுறை முறைவழிப்பாதையைப் பயன்படுத்தி 1,00,000 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் விநியோகிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பினாங்கு, நிபோங் திபால், சுங்கை புவாயாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம், BUDI Madani மானியத்தை தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் சிலர், தங்களுக்குத் தெரியாமலேயே தங்களது MyKad தகவல்களைப் பயன்படுத்தி மானிய விலையிலான பெட்ரோல் வாங்கப்பட்டதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை தொடங்கியது.
அந்த பெட்ரோல் நிலையத்தின் பதிவுகளை நிதி அமைச்சகம் ஆய்வு செய்ததில், 1,000-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் கையேடு மூலம் பைபாஸ் (manual bypass method) செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.
இந்தப் பரிவர்த்தனைகளில் 100,000 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் அடங்கும் என்றும், இதன் மானியத் தொகை ரிம 270,000-க்கும் அதிகம் என்றும் நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த பெட்ரோல் நிலையம் BUDI Madani திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் மற்றும் மானிய விலையிலான டீசல் விற்பனை செய்வதற்கு நிதி அமைச்சகம் உடனடியாகத் தடை விதித்துள்ளது. மேலும், அந்த நிலையத்திற்கான ஆரம்பக்கட்ட மானியக் கொடுப்பனவான ரிம 270,000-க்கும் அதிகமான தொகையை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளதுடன், இது மேல் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை அமைச்சகம் அடையாள கண்டுள்ளதுடன், அவர்களின் பரிவர்த்தனைப் பதிவுகளையும் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
























