சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங், சரவாக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UTS) இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனக்கென சொந்த மருத்துவப் புலத்தையும் (Medical Faculty) உருவாக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சரவாக் மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங், மலேசியா சரவாக் பல்கலைக்கழகத்தில் (UNIMAS) மருத்துவ மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பது, அந்தப் பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாட்டின் மூலம் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில், சரவாக் மாநிலத்தில் உள்ள மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தில் (Unimas) மருத்துவ மாணவர்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை 40-இலிருந்து 80-ஆக இரட்டிப்பாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அதன் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் தெரிவித்துள்ளார்.
சரவாக் அறக்கட்டளை (Yayasan Sarawak) மூலம் நிதியளிக்கப்படும் இந்தக் கூடுதல் மாணவர் சேர்க்கை, வழக்கமான பல்கலைக்கழக மத்தியப் பிரிவு (UPU) விண்ணப்ப நடைமுறைக்கு வெளியே, மாநில அரசுக்கும் Unimas பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான சிறப்பு ஏற்பாட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று அபாங் ஜொஹாரி கூறினார்.
“சரவாக்கில் மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதால், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று அவர் இன்று கூச்சிங்கில் தெரிவித்ததாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் கல்வி உதவித்தொகை பெறும் அனைத்து மாணவர்களும் தங்களது மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் சரவாக் மாநிலத்திலேயே பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், சிபுவில் உள்ள சரவாக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (University of Technology Sarawak) தனக்கென ஒரு மருத்துவப் புலத்தை (Medical Faculty) நிறுவுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அபாங் ஜொஹாரி தெரிவித்தார். எனினும், அதற்கான அடிப்படைப் பணிகளை முடிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றார்.
இந்த இரண்டு ஆண்டுகளும் கற்பித்தல் பணியாளர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்வதற்கும், கடுமையான சர்வதேசத் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறை மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இரு மாநிலங்களிலும் நிரந்தரப் பணியிடங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளில் 63 விழுக்காட்டினர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கெஃப்லி அஹ்மட் அண்மையில் தெரிவித்திருந்தார்.























