மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் மேலும் மூன்று வேட்பாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் அக்கூட்டணி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கூடுதல் வேட்பாளர்கள் அறிவிப்பின் மூலம் சுங்கை ராம்பாய், தபோ நானிங் மற்றும் ஆயர் லிமாவு (Sungai Rambai, Taboh Naning, Ayer Limau) ஆகிய தொகுதிகளில், ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள பாரிசான் நேஷனல் கூட்டணியை பக்காத்தான் ஹரப்பான் நேரடியாக எதிர்த்துப் போட்டியிடும்.
மீடியா சிலாங்கூர் தகவலின்படி, புதிதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் இருவர் அமனா கட்சியைச் சேர்ந்தவர்கள்; மற்றொருவர் PKR கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
மலாக்கா அமானா தலைவர் அஷ்ரப் முக்லிஸ் மிங்காட்(Ashraf Mukhlis Minghat), ஜாசின் அமானா தலைவர் அமினுடின் அப்துல் ஜலீல்(Aminuddin Abdul Jalil) சுங்கை ரம்பாய் தொகுதியிலும், மஸ்ஜித் தானா அமானா(Masjid Tanah Amanah) மகளிர் பிரிவுத் தலைவர் ஜுனைனா சாஹாட் தபோ நானிங்(Junainah Sahat, Taboh Naning) தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தினார்.
சுங்கை ரம்பாய் தொகுதியில் அமினுடின், தேசிய முன்னணியின் புதிய வேட்பாளர் ஜெஸ்லீ பிட்(Jezlee Pit)-ஐ எதிர்த்துப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், தபோ நானிங் தொகுதியில் ஜுனைனா, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சுல்கிஃப்லீ ஸின்(Zulkiflee Zin)-ஐ எதிர்த்துப் போட்டியிடுவார்.
இதற்கிடையில், ஆயர் லிமாவ் தொகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜைமி டிமோனை வேட்பாளராக நிறுத்தப் போவதாக பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளர் புசியா சாலே உறுதிப்படுத்தினார். இதன் மூலம், அத்தொகுதியின் தற்போதைய தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் ஹமீத் மைதீன் குஞ்சு பஷீரை அவர் எதிர்த்துப் போட்டியிடுவார்.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த புதிய சேர்க்கைகளுடன், PKR 10 தொகுதிகளிலும், DAP மற்றும் Amanah ஆகிய கட்சிகள் தலா ஏழு தொகுதிகளிலும் போட்டியிடும்.
முன்னதாக, அக்டோபர் 24 அன்று Hang Jebat(ஹாங் ஜெபட்) மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார தொடக்க விழாவின் போது பக்காத்தான் ஹரப்பான் 21 வேட்பாளர்களை அறிவித்திருந்தது.
தற்போதைய அறிவிப்புக்குக்குப் பிறகும், லெண்டு , சுங்கை உடாங் , பந்தாய் குண்டோர் மற்றும் பெம்பான் (Lendu, Sungai Udang, Pantai Kundor மற்றும் Bemban) ஆகிய நான்கு தொகுதிகளில் பக்காத்தான் ஹரப்பான் இன்னும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
நேற்று எட்டு வேட்பாளர்களை அறிவித்த பெர்சத்து கட்சி, இந்த நான்கு தொகுதிகளிலும் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும்.
2021 மலாக்கா மாநிலத் தேர்தலில், BN 21 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றி பெற்றது. பக்காத்தான் ஹரப்பான் 5 தொகுதிகளையும் (DAP – 4, Amanah – 1), PN எஞ்சிய 2 தொகுதிகளையும் வென்றன.
தேர்தல் ஆணையம் அக்டோபர் 31-ஆம் தேதியை வேட்புமனுத் தாக்கல் நாளாகவும், நவம்பர் 10-ஆம் தேதியை முன்கூட்டிய வாக்களிப்பு நாளாகவும், நவம்பர் 14-ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாகவும் நிர்ணயித்துள்ளது.























