பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு 9 நாட்கள் தீபாவளி விடுமுறை

தாயகம் திரும்புபவர்கள் இணையவழி அல்லது கலப்பு முறை வகுப்புகளில் பங்கேற்கலாம் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் கல்வித் திட்டங்களின் பொருத்தம் மற்றும் தேவைகளைப் பொறுத்து, இணையவழி அல்லது கலப்புக் கற்றல் வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது தீர்மானிக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தீபாவளியைக் கொண்டாடும் அரசுப் பல்கலைக்கழகங்கள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், நவம்பர் 5 முதல் 13ஆம் தேதி வரை தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி, இணையவழி அல்லது கலப்புமுறை வகுப்புகளில் பங்கேற்கலாம்.

பண்டிகைக் காலத்தில் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையவழி அல்லது கலப்புமுறை வகுப்புகளை நடைமுறைப்படுத்துவது, ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் கல்வித் திட்டங்களுக்கும் அவற்றின் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

“இதன் மூலம் கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள், கல்விசார் செயல்பாடுகள் ஆகியவை சுமுகமாக நடைபெறுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த முடியும்,” என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.