குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கைக் காவல்துறை கையாண்ட விதம் குறித்து பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்

பெராப்பிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ கூறுகையில், காவல்துறை தற்காலிகமாக தனது குழந்தையை தந்தையின் தாயாரிடம் (பாட்டியிடம்) ஒப்படைப்பதற்கு முன், தன்னிடம் எந்தத் தொடர்பும் கொள்ளப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்ற தாய் கூறுவதாகத் தெரிவித்தார்.

பெராப்பிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ, அக்டோபர் 16 அன்று காவல்துறை தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்டவரின் தாய் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இது, பாதிக்கப்பட்டவரை எங்கு வைப்பது என்பதைத் தீர்மானிப்பதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது

தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் 11 வயது பள்ளிச் சிறுமியை, அவளது தந்தையின் வழி பாட்டி பராமரிப்பில் ஒப்படைப்பதற்கு முன், அச்சிறுமியின் பெற்ற தாயை காவல்துறை ஏன் தொடர்புகொள்ளவில்லை என்று DAP-யின் ஹெங் லீ லீ கேள்வி எழுப்பியுள்ளார்.

அக்டோபர் 16 அன்று காலை 11.15 மணிக்கு பள்ளி முதல்வர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பிறகு, அச்சிறுமியின் இருப்பிடம் குறித்து ஞாயிற்றுக்கிழமை பினாங்கு காவல்துறை வெளியிட்ட விளக்கத்திற்குப் பதிலளித்து, பெராபிட் சட்டமன்ற உறுப்பினரான ஹெங் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சம்பவத்தன்று சிறுமியின் தாய் சிங்கப்பூரில் இருந்ததால், அக்டோபர் 16 அன்று சிறுமி தற்காலிகமாக அவளது தந்தையின் வழி பாட்டியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டதாக மாநில காவல் தலைமை அதிகாரி டெனிஸ் லிம் தெரிவித்து இருந்தார்.

இருப்பினும், அன்று காவல்துறை தன்னைத் தொடர்புகொள்ளவே இல்லை என்று தாய் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்த ஹெங், சிறுமியை எங்கு ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பினார்.

இந்த வழக்கில் தந்தையே சந்தேக நபராக இருக்கும்போது, சட்டப்பூர்வ பாதுகாவலரான பெற்ற தாயின் சம்மதத்தைப் பெறாமல், எந்தச் சட்டப் பிரிவுகள் அல்லது குழந்தை பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் சிறுமியை தந்தையின் வழி பாட்டியிடம் காவல்துறை ஒப்படைத்தது?

சிறுமியை ஒப்படைப்பதற்கு முன்பாக, அவளது காவல்பராமரிப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து காவல்துறை ஏதேனும் மதிப்பீடு செய்ததா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பிறகு, சிறுமி மீண்டும் அவளது பெற்ற தந்தையின் வீாட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டதாக தாய் கூறியதாக ஹெங் தெரிவித்தார். மேலும், காவல்துறை அளித்த விளக்கத்தில் சிறுமி சரியாக எங்கு தங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அக்டோபர் 16 அன்று சிறுமி சரியாக எங்கு தங்க வைக்கப்பட்டார்? பாட்டியின் முகவரியும், சிறுமியின் பெற்ற தந்தையின் முகவரியும் ஒன்றுதானா?” என்றும் அவர் வினவினார்.

புகார் அளிக்கப்பட்ட அக்டோபர் 16-க்கு மறுநாளான அக்டோபர் 17 அன்றுதான் அச்சிறுமி பினாங்கு மருத்துவமனையின் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையத்திற்கு (One-Stop Crisis Centre) ஏன் அனுப்பப்பட்டார் என்றும் ஹெங் கேள்வி எழுப்பினார்.

“சொந்தத் தந்தையாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது சிறுமியை, புகார் பெறப்பட்ட அன்றைய தினமே மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகளுக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை?” என்று அவர் கேட்டார்.

புகார் வரப்பெற்ற அன்றைய தினமே சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்ய காவல்துறை எடுத்த நடவடிக்கையைப் பாராட்டிய ஹெங், “சந்தேக நபரை முதன்மையாகக் கைது செய்வதும், பாதிக்கப்பட்டவரைக் பாதுகாப்பதும் இரு வேறுபட்ட, ஆனால் சம அளவு முக்கியமான பொறுப்புகளாகும்,” என்று குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பது என்பது உடனடி மருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகள், முக்கியமான ஆதாரங்களை முடிந்தவரை விரைவாகச் சேகரித்து பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பான இருப்பிடத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

“பரிசோதனைகளை நடத்துவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் தடயவியல் ஆதாரங்களைச் சேகரிப்பதிலும் அதன் நம்பகத்தன்மையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சிறுமி பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அக்டோபர் 21 வரை குழந்தை நலப் பிரிவில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தந்தையின் காவல் தடுப்புக் காவல் (remand) முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, சமூக நலத்துறை அச்சிறுமியை அவளது தாயாரிடம் ஒப்படைத்ததாகவும் லிம் கூறியிருந்தார்.

சந்தேக நபர் மீது அக்டோபர் 24 அன்று குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு நவம்பர் 11 அன்று விசாரணைக்கு வருகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.