மலேசியாவுக்குத் தங்கம் கடத்தும் முயற்சி முறியடிப்பு: 25.8 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த இந்தோனேசிய சுங்கத்துறை

இந்த மாதம் மேற்கு சுமத்ராவின் பாடாங் மற்றும் தெற்கு கலிமந்தானில் உள்ள விமான நிலையங்களில் மூன்று வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களில் ஒரு மலேசியரும் அடங்குவார்.

காலணிக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் மலேசிய ஆடவர் ஒருவர், மேற்கு சுமத்ராவின் படாங் நகருக்கு அருகிலுள்ள மினாங்கபாவ் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, தெற்கு கலிமந்தானின் பஞ்சர்மாசின் நகருக்கு அருகிலுள்ள ஷம்சுதீன் நூர் சர்வதேச விமான நிலையத்தில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவுக்குக் கடத்த முயற்சி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்தம் 25.8 கிலோகிராம் தங்கத்தை, இந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட மூன்று தனித்தனி நடவடிக்கைகளில் இந்தோனேசிய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் 62.5 பில்லியன் ரூபியா (ரிம 14.06 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், தங்கக் கட்டிகளைத் தனது காலணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த மலேசிய ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு சுமத்ராவின் பாடாங் நகருக்கு அருகிலுள்ள மினாங்கபாவ் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி 34 வயதுடைய மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டதாக தெலுக் பாயூர் சுங்க மற்றும் கலால் அலுவலகத் தலைவர் அடே ஸிர்வான் தெரிவித்தார்.

இந்தோனேசியாவிலிருந்து 4 கிலோகிராம் தங்கத்தைக் கடத்திச் செல்ல அவர் முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபியா எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவுக்குப் புறப்படும் விமானங்களுக்கான பயணிகள் காத்திருக்கும் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்துகொண்ட பயணி ஒருவர் குறித்த தகவல் கிடைத்ததாக அடே தெரிவித்தார்.

“அதனைத் தொடர்ந்து, அந்தப் பயணியைக் கண்காணித்து, அவரது நடவடிக்கைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், பின்னர் அவரைச் சோதனையிட்டனர்,” என்று அவர் கூறினார்.

ஆய்வகப் பரிசோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் தூய்மை 99 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தோனேசியாவின் சுங்கச் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், சந்தேக நபர் மேற்கு சுமத்ரா மாநிலக் காவல்துறையின் தடுப்புக் காவல் மையத்தில் 20 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 மில்லியன் முதல் 5 பில்லியன் ரூபியா வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையில், தெற்கு கலிமந்தானின் பஞ்சர்மாசின் நகருக்கு அருகிலுள்ள சியாம்சுதின் நூர் அனைத்துலக விமான நிலையத்தில், கடந்த நவம்பர் 5 மற்றும் 12ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரு தனித்தனி நடவடிக்கைகளில் 21.8 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்தோனேசிய சுங்க மற்றும் கலால் துறையின் தலைமை இயக்குநரகம் தெரிவித்தது. இதன் மதிப்பு சுமார் 52.5 பில்லியன் ரூபியா என மதிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 5ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையில், கோலாலம்பூருக்குப் பயணம் செய்யவிருந்த நான்கு இந்தோனேசியப் பெண்களின் பயணப் பெட்டிகளை எக்ஸ்ரே மூலம் சோதனையிட்டதுடன், அவர்களிடம் உடல் சோதனையும் நடத்தப்பட்டது. இதன்போது, சந்தேகத்திற்குரிய 4.2 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நவம்பர் 12ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிக்கையில், பயணிகளின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூருக்கான விமானத்தில் ஏறத் தயாராக இருந்த மூன்று பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களது காற்சட்டைகள் மற்றும் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17.6 கிலோகிராம் எடையுள்ள 17 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தேவையான ஏற்றுமதி அறிவிப்புகளைச் சமர்ப்பிக்காமல் பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்த மூவரும் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தலைமை இயக்குநரகம் தெரிவித்தது.

மேலும், பஞ்சர்மாசின் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரு பறிமுதல் நடவடிக்கைகளிலும், செலுத்தப்படாமல் விடப்பட்டிருக்கக்கூடிய ஏற்றுமதி வரி 5.2 பில்லியன் ரூபியா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.