வேதமூர்த்தி பதவியிலிருந்து வெளியேற வேண்டும்

-மு. குலசேகரன், ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 14, 2013.

 

Hindraf-Waythamoorthyவேதமூர்த்தி துணை அமைச்சர் பதவி ஏற்ற 100 நாட்களில் தன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை என்று அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

 

கடைசி நிமிடம் வரை அம்னோவையும் பாரிசான் அரசையும் எதிர்த்து வந்த வேதமூர்த்தி, பாக்கத் தானுடன் பேச்சு முறிவை  ஏற்படுத்தி விட்டு,  நஜீப்புடன் கூட்டு சேர்ந்து 32 அம்ச கோரிக்கையில் கையொப்பமிட்டார்.

 

100 நாட்கள் ஆகியும் அதில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை என்பதை  அவர்  வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார். எதை நான் ஏற்கனவே பலமுறை பத்திரிகை வாயிலாக வேதமூர்த்தியிடம் சொன்னேனோ அது இப்பொழுது  நிரூபணமாகியிருக்கிறது.

 

சொந்த அண்ணனை ஜெயிலிலிருந்த்து விடுவிக்க முடியாத வேதமூர்த்தி எப்படி 2 மில்லியன் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கப் போகிறார்?

 

கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு கல் எறிவது போல, வேதமூர்த்தியின்  நடவடிக்கை கடந்த 100 நாட்களாக இருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் நன்றாக .அம்னோகாரர்களிடமிருந்து வாங்கியும் கட்டிக் கொண்டார். தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், உள்நாட்டு அமைச்சர்  சாஹிட் ஹாமிட், கடைசியாக பிரதமரும் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளனர். எங்களுடம் ஒத்துழை, இல்லையேல் வெளியேறு என்று அந்த மூவரும் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

 

கூடா நட்பின் வழி இந்தியர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கும்  வேதமூர்த்தி அவரின் கற்பனை HINDRAF2கனவுலகிலிருந்து நிஜ உலகிற்கு  மீண்டும் வரவேண்டும்.

 

முதல் வேலையாக தன் சகோதரரை சிறையிலிருந்தது மீட்க தன்னுடைய செல்வாக்கை (மிச்சம் ஏதேனும் இருக்குமானால்)  பயன் படுத்த வேண்டும். இதுவே அவர் இந்தியர்களுக்கு செய்யும் மகத்தான சேவையாக  கருதப்படும். இதில் வெற்றி கண்டால் மட்டுமே அவரின் பலத்தை மக்கள் மதிப்பீடு செய்ய முடியும்.  

 

எனக்கும்  உதயகுமாருக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஓர்  இந்தியன் என்ற முறையிலும்,  எங்களின் இறுதிக் குறிக்கோள் இந்த நாட்டில் உண்மையான  ஜனநாயகம் மலர்ந்து எல்ல குடிமக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டுமென்று இருப்பதாலும் அவரின் விடுதலையை நானும் கோருகிறேன்.

 

தம்பி பணிந்ததால் அவனுக்கு அரியணையும் அண்ணன் எதிர்த்ததால் அவனுக்கு சிறையும் தந்த இந்த பாரிசான் அரசு காலனித்துவ ஆட்சியில் வெள்ளையன் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியையே நமது  இந்தியர்கள் விடயத்திலும் கடைபிடிக்கின்றது.

 

m-kulasegaranஉண்மையில் இந்திய சமூகத்தின் வாக்குகளுக்காவே  தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் பாரிசான் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வேதமூர்த்தியுடன் செய்து கொண்டது. அது வெறும் வெத்துக் காகிதம்தான் என நானும் பலரும் கூறிய போதும் நம்பாத  வேதமூர்த்தி இப்பொழுது முழித்துக் கொண்டிருக்கின்றார்.

 

இன்று மலாய்க்கார்களுக்கென 10 பில்லியன் ரிங்கிட்டுடன்     சிறப்பு அமான சஹாம் புமிபுத்ரா 2 அறிவித்த பிரதமர் நஜிப், நினைத்திருந்தால் இந்தியர்களை கறையேற்ற அதில் பத்தில் ஒரு பங்கையாவது எப்போதோ ஒதுக்கியிருக்கலாம். இதை அவர் செய்யமாட்டார் என்று எல்லாருக்கும் தெரியும்.

 

ஆகவே, வேதமூர்த்தி தன்மானமுடையவரென்றால் உடனடியாக  தன் பதவியைத் துறக்க வேண்டும்.

 

TAGS: