சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா ரஷ்யா இடையே உடன்பாடு

syria-1சிரியவில் இருக்கும் இரசாயன ஆயுதங்களை அடுத்த ஆண்டு மத்திவாக்கில் முழுமையாக அழிக்கும் வகையிலான ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

இதற்காக ஆறு அம்சத் செயற்திட்டம் ஒன்றை அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில், தம்மிடம் இருக்கும் அனைத்து இரசாயன ஆயுதங்கள் குறித்த முழுத் தகவலை சிரியா ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறுதல், காலவரையறை ஆகியவை உள்ளடங்கியுள்ளன என்று ஜான் கெர்ரி கூறுகிறார்.

“வேறு வழியில்லை”

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் சித்து விளையாட்டுகளுக்கு இடமில்லை என்றும், சிரிய அதிபர் அஸாதின் அரசால் முழுமையாக ஏற்று நடப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

இன்னும் ஒரு வாரத்துக்குள் சிரியா அளிக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு, இரசாயன ஆயுதப் பரிசோதகர்கள் நவம்பர் மாதம் அங்கு செல்ல வழி வகுக்கும் எனவும் கெர்ரி மேலும் கூறினார்.

ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாஃபராவோ இவையெலாம் வெறும் பிரேரணைகள் மட்டுமே எனக் கூறுகிறார்.

இந்த உடன்பாடு பிரேரணை என்கிற அடிப்படையிலேயே உள்ளது எனவும், இது இன்னும் சட்டரீதியான ஒரு வடிவத்தை பெறவில்லை எனவும் கூறும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், எனினும் அதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த உடன்பாடுகளை சிரியா மதித்து நடக்கவில்லை என்றால், அதன் மீது பலத்தை பிரயோகப்படுத்துவது குறித்து எந்தவிதமான கருத்துகளும் இப்பிரேரணைகளில் இல்லை.

எச்சரிக்கை

ஆனால் உடன்பாட்டிலிருந்து விலகிச் செல்லும் பட்சத்தில், அதை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவுக்கு கொண்டு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை, சிரியாவின் எதிர்தரப்பு இராணுவ கிளர்ச்சி அமைப்பின் ஒரு தலைவர் புறந்தள்ளியுள்ளார்.

தம்மைப் பொருத்தவரையில் இந்த உடன்படிக்கையில் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். -BBC