வட மாகாணசபை தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வாழும் மலையக வம்சாவளி தமிழ் மக்கள் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டன் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பணிமனையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தெற்கில் குறிப்பாக, மேல்மாகாணத்தில் வாழும் வடகிழக்கு வம்சாவளி தமிழ் மக்கள் நமது ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையின் கீழ் அணிதிரண்டு ஆதரவு வழங்குவது போல், வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையின் கீழ் அணிதிரண்டு வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து ஆதரவளிக்க வேண்டும் என வடக்கில் வாழும் அனைத்து மலையக வம்சாவளி தமிழ் மக்களையும் தயவாய் வேண்டுகின்றேன்.
வடக்கின் பிரதான மாவட்டங்களில் ஹட்டன், தலவாக்கலை, மஸ்கெலிய, களுத்தறை ஆகிய பிரதேசங்கள் உட்பட பல்வேறு தென்னிலங்கை மாவட்டங்களை பூர்வீகமாக கொண்ட மக்கள் கணிசமாக வாழ்கின்றார்கள்.
இவ்வாறாக வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்கள், அங்கு வாழும் தமிழ் தேசிய இனத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இந்த உள்வாங்கல் பரஸ்பர அங்கீகாரத்துடன் சுமூகமாக நடைபெற வேண்டும். கடந்த காலங்களில் நிலவிய கண்ணியமான சுமூக நிலைமையை குழப்புவதற்கு சிலர் இன்று திட்டமிடுகின்றார்கள். இதை இன்று வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நடைமுறை கட்சி அரசியல் சிக்கல்கள் காரணமாகவும், புரிந்துணர்வு சிக்கல்கள் காரணமாகவும் மலையக வம்சாவளி தமிழ் மக்கள், வடகிழக்கு தமிழ் தேசிய பரப்பில் உள்வாங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த விவகாரம் தொடர்பாக நிலவிய சுமூக நிலைமையை பழுதாக்க வடக்கிலும் தெற்கிலும் பலர் இன்று முன்னின்று செயல்படுகின்றார்கள்.
வடக்கு வாழ் மலையக வம்சாவளி மக்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் நான் காத்திரமான கருத்து பரிமாற்றங்களை செய்துள்ளேன். வடக்கின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார வாழ்வு தளங்களுக்குள் வடக்கு வாழ் மலையக வம்சாவளி மக்கள் முழுமையாக உள்வாங்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும்.
எனவே இன்று கவனயீனம் காரணமாகவும், திட்டமிட்டும் உருவாக்கப்படும் முரண்பாடுகளை பெரிது படுத்தாமல், தமிழ் தேசிய உணர்வுடன் சிந்தித்து வாக்களியுங்கள் என வடக்கு வாழ் மலையக வம்சாவளி மக்களை நான் வேண்டுகின்றேன்.
இன்று இத்தகைய சில காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஒரு சமகால வரலாற்று அடிப்படை உண்மையை மனதில் கொள்ள வேண்டும். பல்வேறு பேரினவாத தாக்குதல்களினால் தெற்கில் இருந்து துரத்தப்பட்ட மலையக தமிழ் வம்சாவளி மக்களுக்கு, வடக்கு தமிழ் மக்களும், அரசியல் தலைமையும் வரவேற்பு வழங்கி அடைக்கலம் வழங்கியது என்பது அந்த சமகால வரலாறு.
தமிழ் தேசிய இனத்துக்குள் வடக்கு வாழ் மலையக வம்சாவளி மக்களை சுமூகமாக உள்வாங்குவதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் முன்னுதாரணமாக செயல்படுவதை நான் அறிவேன். ஏனைய கூட்டமைப்பு கட்சிகளும், இந்த விவகாரம் தொடர்பாக இந்த கட்சிகளின் கொள்கைகளை பின்பற்ற வேண்டுமெனவும் நான் விரும்புகின்றேன்.
இன்று வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை நான் எனது வடக்கு விஜயங்களின் போது அறிந்து கொண்டுள்ளேன். வடக்கில் வாழும் ஈழத்தமிழர்களும் என்மீது அன்பு கொண்டுள்ளார்கள். சிறு முரண்பாடுகளை தள்ளி வைத்து விட்டு வட மாகாணசபை தேர்தலில் அனைத்து தமிழர்களும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் ஒரே அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பதுவே எனது எதிர்பார்ப்பு.
எனவே எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்துக்கு வடக்கு வாழ் மலையக வம்சாவளி வாக்காளர்கள் அனைவரும், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டுமென வேண்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.