வடக்கில் யார் வெல்வார்கள் என்பது எனக்கு தெரியும்: ஜனாதிபதி மகிந்த ஆரூடம்

rajapaksaவடக்கில் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ் ஊடகங்களில் தலைவர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கின் தேர்தல் முடிவுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் வடக்கில் தேர்தலை நடத்தியது எனக்கு கிடைத்த வெற்றியாகும்.

வடக்கில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம் அவர் தென் பகுதியை சேர்ந்தவர்.

அடுத்து வடக்கை ஆட்சி செய்ய போகிறவர் தென் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். எனக்கும் அவர் தூரத்துச் சொந்தம்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக பதவிக்கு போட்டியிட வைத்திருக்க வேண்டும்.

மாவை சேனாதிராஜா அதற்கு பொருத்தமானவர். நான் அறிந்த காலத்தில் இருந்து அவர் தொழிற்சங்கவாதியாக இருந்தார். அத்தோடு கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதி. 70 ஆம் ஆண்டுகளில் கியூபாவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டுக்கு சென்றார். அவருக்கு சிறந்த அனுபவம் உள்ளது.

அதேபோல் சுரேஷ் பிரேமச்சந்திரன் சிறந்த நபர். அவர் எனது சிறந்த நண்பர். தற்போது சந்திப்பது குறைவு. அந்த காலத்தில் அவர் எனது ஆலோசகராக பணியாற்றினார்.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் சுரேஷ் எனது ஆலோசகராக இருந்தார். ஏன் அந்த தமிழனை வைத்து கொண்டிருக்கிறீர் என்று சந்திரிக்கா என்னிடம் கேட்டார்.

அமைச்சர் டியூ. குணசேகரதான் அமைச்சரவையின் அனுமதியை பெற்று அவரை நியமித்துள்ளார் எனவும் அதனால் அவரை நீக்க முடியாது என்றும் நான் சொன்னேன்.

அதன் பின்னர் சந்திரிக்கா அமைதியானார். அடுத்த அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் சுரேஷை என்னால் நியமித்து கொள்ள முடியாமல் போனது. காரணம் அந்த காலத்தில் என்னால் அமைச்சரவையில் அனுமதிகளை பெறமுடியாதிருந்தது.

கூட்டமைப்பு தென் பகுதியை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக நியமிக்க உள்ளது நல்லது. அவருடன் எமக்கு சிறந்த முறையில் பணியாற்ற முடியும் என்றார்.

TAGS: