தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள் என கூறவில்லை: சீ.வி விக்னேஸ்வரன் மறுப்பு

sampanthan_meeting_003தமிழரும் சிங்களவரும் கணவன்- மனைவி உறவு போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது.

எனினும் த ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் 10 மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை.

ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவு படுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார் என்றார்.

அதேவேளை ஹிந்து பத்திரிகை தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு வழங்கிய பதில்கள் பற்றிய தகவல் வெளியிட்ட விக்னேஸ்வரன்,

தென்னியந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிந்தேன்.

மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும்.

அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன்.

இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன்- மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிலங்கையில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன்.

எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர்.

அவர்களது அனுசரனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

TAGS: