வடக்கு மாகாண சபை தேர்தல்! தமிழர்களின் தீர்ப்பு என்ன?

northern_mapஇலங்கையிலும், இலங்கையின் எல்லைகளுக்கு அப்பாலும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. அந்தளவுக்கு தேர்தல் நெருங்கி வந்து விட்டது.

இந்தத் தேர்தல் நடத்தப்படும் முறையும் அதன் முடிவுகளும் இலங்கையின் எந்தவொரு மாகாண சபைக்கும் இல்லாத எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல்கள் மட்டுமே மிகவும் அதிகமான எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக அமைந்தவை என்று குறிப்பிடலாம்.

முதலாவது 1977 தொடக்கம் தொடர்ச்சியாக எல்லாத் தேர்தல்களிலும் ஐதேகவே கோலோச்சி வந்தநிலையில், சந்திரிகா குமாரதுங்கவை மாற்று அரசியல் தலைமைக்கு இழுத்து வந்தது 1993ம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தல்.

north_electionஅந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதொரு அரசியல் தலைமைக்கு வழிகாட்டியது.

சந்திரிகா அப்போது பெற்ற வெற்றி தான் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிகாரத்தை நிலைப்படுத்தி நிற்பதற்கு ஆணிவேராக உள்ளது.

இரண்டாவது இப்போது நடக்கப் போகின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் தான் இதற்கடுத்து முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதலாம்.

1988ற்கும் 2013ற்கும் இடையில் பல மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தியிருந்தாலும்,  அவை எல்லாவற்றையும் விட இவையிரண்டுக்கும் தான் முக்கியத்துவம் அதிகம்.

இப்போது நடக்கப் போவதுதான் வடக்கில் நடக்கப் போகும் முதல் மாகாண சபைத் தேர்தல்.

இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு 1988ல் தேர்தல் நடந்திருந்தாலும் அது காத்தரமான சூழலிலோ, நியாயமான முறையிலோ நடத்தப்படவில்லை என்பதால் அந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

பரவலான எதிர்பார்ப்பையும் அது ஏற்படுத்தியிருக்கவில்லை.

மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தாலும் அவை இந்தளவுக்கு சர்வதேச எதிர்பார்பபையோ முக்கியத்துவத்தையோ கொண்டிருக்கவில்லை.

ஏனைய மாகாணங்களில் நடந்த மற்றெல்லாத் தேர்தல்களுமே வழக்கத்துக்கு அதிகமான எந்த முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவில்லை.

அதனால்தான் வடக்கு மாகாண சபைக்கு நடக்கப் போகும் முதல் தேர்தலும் சந்திரிகா குமாரதுங்கவை அரசியலின் உச்சத்துக்கே கொண்டு செல்லக் காரணமாகிய 1993 மாகாண சபைத் தேர்தலும் இலங்கையின் வரலாற்றில் அதி முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் ஆயுதப் போராட்ட அரசியலுக்குப் பின்னர் தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக அமையும் என்ற எதிர்பார்ப்பே வலுவாகக் காணப்படுகிறது.

ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னர் வடக்கில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் அவர்களின் ஆணையையும் உலகிற்கு அறிவிக்கும் முக்கிய நிகழ்வாகவும் இந்தத் தேர்தல் அமையப் போகிறது.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கட்சிகளை தமிழ் மக்கள் ஆதரிக்கின்றனரா? அல்லது தமிழ் தேசிய அரசியலை வழிநடத்தும் தமிழர்களின் தனி உரிமைகளை வலியுறுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனரா என்பதை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தப் போகிறது.

கடைசியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தெளிவான ஓர் ஆணை பெற்று வந்தால் மற்றவற்றைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியதாக ஒரு தகவல்.

போருக்குப் பிந்திய தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்பட்டு விட்டது.

அதனால் தான் இந்தியப் பிரதமர் மன்மோன் சிங்கும் அழைத்துப் பேசுகிறார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் தமது நாட்டுக்கு அழைத்துப் பேசுகிறது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் மிக்க பேச்சுக்களை சந்திப்புகளை நடத்தியிருந்தாலும் இந்தளவுக்கு இராஜதந்திர அங்கீகாரத்தை விடுதலைப் புலிகள் கூடப் பெற்றிருக்கவில்லை.

முன்னர் விடுதலைப் புலிகளால் ஏற்கப்பட்ட அமைப்பாக, விடுதலைப் புலிகள் பின்னாலிருந்து இயக்கிய அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், புலிகளுக்குப் பின்னரும் அவர்களுக்கு இராஜதந்திர மரியாதை அளிக்கப்படுவதற்கு ஒரே காரணம் தமிழ் மக்கள் தேர்தல்களில் கொடுத்த ஆணை தான்.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜனநாயக ரீதியாகத் தேர்தல்களில் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்தவொரு நாட்டினாலும் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்று மாகாண அரசு ஒன்றை நிறுவினால் அதற்கு இன்னும் கூடுதல் அங்கீகாரத்தை சர்வதேச சமூகம் கொடுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

அத்தகையதொரு வெற்றியை முன்னிறுத்தியே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளது.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி, நிலையான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கான களமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனிக்கிறது.

அதேவேளை, அரசாங்கத் தரப்போ, தமிழ் மக்கள் தனிநாட்டையோ, தன்னாட்சியையோ, சமஷ்டியையோ கேட்கவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் வெறும் அபிவிருத்தி மட்டும் தான் என்றளவிலேயே தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

தமிழரின் உரிமைகள் என்று எதையும் முன்னிலைப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி தேர்தலில் நின்று வெற்றி பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரின் உரிமைகள் குறித்துப் பேச முடியாமல் செய்வதற்கு அரசதரப்பு முனைகிறது.

இத்தகைய சூழலில் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்கக் கூடிய நிலை எல்லா இடங்களிலும் இருக்குமா – நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விகள் வலுவாக இருந்தாலும் தமிழ் மக்கள் யாரைத் தெரிவு செய்யப் போகின்றனர் என்பதை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஆனால் அது எந்தத்தரப்பு என்பதைப் பொறுத்தே அது சாதகமான மாற்றமா, பாதகமான மாற்றமா என்பது தீர்மானிக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை மேலும் வலுப்படுவதுடன், தமிழர் பிரச்சினையை விரைவாகத் தீர்க்க வேண்டும் என்பதற்கான சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கும்.

அரசதரப்பு வெற்றி பெற்றால், அபிவிருத்தியே போதும் என்று தமிழர்கள் திருப்திப்பட்டு விட்டனர் என்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழர் பிரச்சினையில் தமக்குள்ள கடப்பாடு முடிந்தது என்று ஒதுங்கிப் போக முனையலாம்.

இந்தநிலையில், வடக்கிலுள்ள தமிழர்களின் தெரிவு என்ன என்பது எதிர்வரும் சனிக்கிழமை தீர்மானிக்கப்பட்டு விடும்.

தமிழர்களின் தெரிவு என்னவாயினும், இலங்கையின் வரலாற்றில் முக்கியமான மாகாண சபைத் தேர்தல்களில் ஒன்று என்ற பதிவு மட்டும் அழிந்து விடாது.

அதேவேளை, இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேராதரவுடன் வெற்றி பெற்றால், மேல் மாகாணசபைத் தேர்தல் சந்திரிகாவை எவ்வாறு உச்சத்துக்கு கொண்டு சென்றதோ, அதுபோல சி.வி.விக்னேஸ்வரனையும் தமிழர் தரப்புக்கு தலைமை தாங்கும் சக்தியாக உயர்த்தினாலும் ஆச்சரியமில்லை.

– ஹரிகரன்

TAGS: