த.தே.கூட்டமைப்பு வன்முறையை ஒருபோதும் விரும்பவில்லை! சுயமரியாதையுடன் சுதந்திரமாக வாழவே விரும்புகிறோம்: இரா.சம்பந்தன்

sambanthanத.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான அரசியல், பொருளாதார, சமுக அபிலாஷைகளை நிறைவு செய்து கொண்டு வாழவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

எங்கள் பிரச்சினை ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகும். ஜனநாயக, சாத்வீக வழிப்போராட்டங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதனாலேயே அது ஆயுதப் போராட்டமாக மாற்றம் கண்டு மிக தீவிரமாக வளர்ந்து, இலங்கை அரசாங்கத்திற்கு மிகப்பெரும் சவாலக மாறி, பின்னர் அதுவும் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் மீண்டும் வன்முறையை விரும்பவில்லை.

13ம் திருத்தச் சட்டம் தமிழர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாகாது. ஆனால் ஆரம்பபடியாக கொள்ள முடியும். ஆனால் அதனையும் முடக்க அல்லது நீக்குவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டியிருக்கின்றது. ஆனால் நாங்கள் இந்திய உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

அதாவது இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்பது ஒரு சர்வதேச ஒப்பந்தம். அதனை இலங்கை அரசாங்கம் தான் நினைத்தாற்போல் மாற்றியமைக்க முடியாது என்பதை. எனவே அந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்கள் பிற்போடப்பட்டிருக்கின்றன. எனினும் முழுமையாக அவை நீக்கப்பட்டதாக நான் கூறமாட்டேன்.

மேலும் 2009ம் ஆண்டு இறுதியுத்தத்தில் சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் அல்லது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும். அதனடிப்படையில் உன்மை அறிவதற்கு சர்வதேச சுயாதீன விசாரணையொன்று நடத்தப்படுவது அவசியம்.

உள்நாட்டில் அவ்வாறானதொரு விசாரணை நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணையே பிரதானம் பெறுகின்றது. தமிழர்களின் போராட்டத்தில் நியாயம் இருக்கின்றது. இலங்கையில் தமிழ் மக்களிற்கு சமவுரிமை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைக்கப் பெறாவிட்டால் மீண்டும் இந்த நாட்டில் வன்முறை உருவாகும்.

எனவே இந்த விடயத்தில் சர்வதேச தலையீடு அவசியம் என்பதை சர்வதேசம் புரிந்துகொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஐ.நா செயலாளர் நாயகம் இங்கே வந்து பார்வையிட்ட தன் பின்னர் இலங்கை அரசின் பொறுப்புக் கூறல், போர்க்குற்றங்கள், தொடர்பில் ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் அவர்களது வாழ்விடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்பன போன்ற முக்கிய விடயங்களை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கேப்பாபிலவில் மக்களுடை ய நிலங்கள் படையினரால் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் 8கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கோம்பாவிலில் குடியேற்றப்பட்டு  அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மணலாற்றில் மக்களுடைய நிலம் அபரிக்கப்பட்டு அந்த நிலம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே பிரச்சினை வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் அரசாங்கம் எம்மையும் எங்கள் தலைவர்களையும் ஏமாற்றியதற்கான பிரதிபலனாக சர்வதேசத்தின் முன்னால் குற்றவாளியாக நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அண்மையில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அம்மையார் இங்கே வருகை தந்து நிலமைகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

எம்மையும் சந்தித்தார், பின்னர் பத்திரிகையாளர்களையும் சந்தித்து பல விடயங்களை கூறியிருக்கின்றார். இதனை விட எதிர்வரும் 25ம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் அவர் வாய் மூல அறிக்கையொன்றினை வழங்கவுள்ளார். அதேபோல் அடுத்த ஆண்டு வைகாசி மாதம் எழுத் துமூல அறிக்கையொன்றையும் அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

இவற்றினடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சூழல் ஒன்று ஏற்படலாம். அங்கே எவ்வாறான தீர்ப்பு அல்லது தீர்மானம் வரும் என எங்களால் இப்போ து கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக இந்த நாட்டில் ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு தீர்மானமாக அமையும்.

எனவேதான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை சர்வதேச நாடுகளும், ஐ.நாவும் மிக உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதாவது தமிழ் மக்களின் பூர்வீக வாழ்நிலமாக வடகிழக்கில் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக வாக்களிக்கப் போகிறார்களா அல்லது அபிருத்திக்காக வாக்களிக்கப் போகிறார்களா என.

நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. அபிவிருத்தி தேவையற்றது என்றும் கூறவில்லை. இறைமை மக்களுக்குரியது. அந்த அபிவிருத்தியை நாங்கள் செய்யவேண்டும். அபிவிருத்தியின் பெயரால் எங்கள் வாழ்நிலங்களில் எங்கள் இன விகிதாசாரம், எங்கள் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே பல்லினங்கள், பல மொழிபேசும் மக்கள், பல சமயங்களைச் சேர்ந்த மக்கள், வாழும் நாடுகளில் ஏற்படுத்தப்படும் தீர்வினைப் போன்று எங்கள் சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு எமக்கும் அமையவேண்டும். எம்மை யாரும் ஏமாற்ற முடியாது என்றார்.

TAGS: