இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர சதுக்கத்தில் காணப்படும் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் சிலையை அகற்றுமாறு தாம் கோரியதாக, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தாம் இவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது ஆளும் கட்சியின் சில அமைச்சர்கள் தம்மை இழிவுபடுத்தி அவமானப்படுத்தியதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரின் கருத்து தொடர்பில் உத்தியோகபூர்வமாக அண்மையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது டி.எஸ்.சேனாநாயக்க சிலை பற்றி எதனையும் குறிப்பிடவில்லை எனவும், இலங்கை விஜயத்தின் போதே சிலை பற்றிய எதனையும் குறிப்பிடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், சுதந்திர சதுக்கத்தில் தேசியக் கொடிக்கு மேலதிகமாக பௌத்த மத கொடி காணப்படுகின்றமை குறித்து கேட்டறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன மத வன்முறைகள் இடம்பெற்று வருவதனால் ஒரு மதம் சார்ந்த கொடியை மட்டும் பறக்க விடுவது பொருத்தமாக அமையுமா என கேள்வி எழுப்பியிருந்ததாகவும், வேறும் எதனையும் குறிப்பிடவில்லை எனவும் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
பக்கத்தில் உள்ள பெப்… பய நாடே ஒன்றும் செய்ய வில்லை .நீங்கள் எதற்கு அம்மா அழுகிறீர்கள் .