தமிழரான நவநீதம்பிள்ளை யுத்தம் குறித்து ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்!- ஜி.எல்.பீரிஸ் பேட்டி

navi_perisஇலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்தது குறித்து தமிழினத்தைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்று தான் கருதுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

அவர் ஊடகவியலாளர் சச்சின் பராசாத்துக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறான கருத்தை தெரிவித்துள்ளார்.  அத்துடன் இன்றைய சூழ்நிலையில் இந்தியா எவ்விதம் செயற்பட வேண்டுமென்றும் அவர் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: இலங்கை அரசாங்கம் சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருக்கிறதென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் குற்றம் சுமத்தியிருக்கிறார். இது உண்மையா?

பதில் – அவர் இலங்கை மீது குரோத உணர்வுடன் ஒருதலைப்பட்சமாகவே இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் எவ்வித உண்மையும் இல்லை.

நவநீதம் பிள்ளையின் விஜயத்தின் போது அரசினால் அவர் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை அவர் பொருட்படுத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன்..

ஐக்கிய நாடுகள் அமைப்பு வடபகுதியில் உள்ள 917பேரை பேட்டி கண்ட போது அவர்களின் பெரும்பாலானோர் இராணுவம் வடபகுதியில் நிலைகொண்டிருப்பது தங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

வடபகுதியில் இருந்து இராணுவம் படிப்படியாக குறைக்கப்பட்டிருக்கின்ற விடயத்தையும் அவர் அவதானத்ததில் எடுத்துக் கொள்ளவில்லை.

தேசிய உற்பத்தித் திறன் 6.2சதவீதமாக இருக்கின்ற போதிலும் வடபகுதி 22 சதவீதம் உச்ச நிலை அடைந்திருப்பதையும் நவநீதம்பிள்ளை அவதானிக்க தவறி விட்டார்.

நவநீதம்பிள்ளை இரகசியமான முறையில் பிரபாகரன் மரணித்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார். தான் அவ்விடத்திற்கு சென்று அங்கு மரணித்த அனைவருக்காகவும் மலரஞ்சலி செய்யப் போவதாக கூறியிருந்தாலும் இது பற்றி அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அப்படியிருந்தும் அவருக்கு விரும்பிய இடமெல்லாம் செல்ல அரசாங்கம் அனுமதித்தது. நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்காலுக்கான இரகசிய விஜயம் குறித்து கொழும்பில் உள்ள ஐ. நா காரியாலயத்திற்கு கூட அறிவிக்க தவறிவிட்டார்.

புதிதாக அமைக்கப்பட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சு சிவிலியன் நிர்வாகத்தில் இருக்க வேண்டுமென்று கூறியதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிவிலியன் அதிகாரி இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தக்கூற்று முற்றிலும் தவறானது.

கேள்வி:  நவநீதம்பிள்ளை இவ்விதம் செயற்படுவதற்கு அவர் தமிழராக இருந்தது ஒரு காரணமாக இருக்குமென்று இலங்கை நம்புகிறதா?

பதில் – இத்தகைய குற்றச்சாட்டுகளை நான் சுமத்த விரும்பவில்லை. ஒருவருடைய அறிவு உண்மைத்தன்மையைப் போன்று முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவரது பின்னணி அறிவு அவ்விதம் அமைந்திருந்தால் அதனை ஊக்குவிக்க எதுவும் செய்யலாகாது.

யுத்தம் முடிந்து சரியாக ஒரு வாரத்திற்கு பின்னர் நவநீதம்பிள்ளை சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று கேட்டார். எந்த ஆதாரங்களை வைத்து இவர் இந்த கோரிக்கையை விடுத்தார்? இவரது மனோ நிலையை கடந்த மாதம் முள்ளிவாய்க்காலுக்கு செல்ல அவர் இரகசியமாக எடுத்த முயற்சி எடுத்துக்காட்டுகின்றது. இவர் ஒரு விடயம் பற்றி சகல அம்சங்களையும் அறியாத நிலையிலேயே தீர்மானம் எடுக்கிறார் என்றே நினைக்கிறேன்.

இலங்கை 65 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் கொண்ட நாடு. இவர் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். ஏன் பிரபாகரன் இறந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த விரும்பினார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தென்னிலங்கையில் உள்ள மக்களின் மனோநிலையை நாம் அவதானிப்பது அவசியம்.

கேள்வி: இலங்கை நியாயமற்ற முறையில் இலக்கு வைத்து தாக்கப்படுகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில் – யூகோஸ்லாவியா அல்லது கம்போடியா போன்ற நாடுகளைவிட எங்கள் நாட்டின் மீது அழுத்தங்கள் அதிகமாக இருந்தன. மற்ற நாடுகளில் முரண்பாடு முடிவடைந்த பின்னர் ஏன் இலங்கையை மட்டும் இவ்விதம் இலக்கு வைத்து தாக்குகிறார்கள்?

செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் எல்.ரி.ரி.ஈ பதுக்கி வைத்த பெருமளவு செல்வத்திற்கு இடையிலான தொடர்பும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

கேள்வி:  இன்றைய சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் – இந்திய அரசாங்கம் எங்கள் தரப்பின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு  அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்கியது பற்றியும் இந்தியா புரிந்துணர்வை வைத்திருத்தல் அவசியம். இது ஓர் உணர்வு பூர்வமான பிரச்சினை. இதனை தீர்த்து வைப்பதற்கு காலமும், அவகாசமும் அவசியம். எனவே, நாம் இந்தியாவிடம் இருந்து நல்லெண்ணத்தை எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று எவரும் கருத முடியாது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் இந்தியாவின் அதி உயர்மட்ட தலைவர் கலந்து கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

கடந்த 4 ஆண்டு காலத்தில் நாம் அடைந்த முன்னேற்றங்களை அவதானிப்பதற்கு இந்த உச்சி மாநாடு ஓர் அரிய சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

TAGS: