வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற மிக மோசமான தேர்தல் முறைகேட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அவற்றுக்கு ஊக்கமளித்துவரும் நிலையில் தமிழர்கள் நீதிக்காக இனிமேல் யாரிடம் செல்வது என யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர்கள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று கனடா மற்றும் நோர்வே நாடுகளின் தூதுவர்களை ஒன்றாக சந்தித்த மேற்படி மாவட்டங்களின் ஆயர்கள் அவர்கள் முன்னிலையில் மேற்படி கேள்வியினை எழுப்பியுள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தில் அமோக வெற்றி பெறவுள்ள நிலையில் அதனைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவமே திருமதி அனந்தி சசிதரன் வீட்டின் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும்.
இவை மட்டுமல்ல வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இராணுவம் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. பல வன்முறைச் சம்பவங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நாம் அறியவில்லை.
இந்த நிலமையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளமையினை நாங்கள் தூதுவர்களிடம் எடுத்துக் கூறியிருக்கின்றோம். அவர்கள் எம்மிடம் கேட்டிருந்தார்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடிந்த ஒன்றா என்று. அதற்கு நாங்கள் பதிலளிக்கையில்,
அவர்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தமிழ் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் வாழவேண்டும் என்றும். அவர்களுக்குரித்தான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாது வழங்கப்பட வேண்டும், அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதே. அவற்றையே எமது மக்கள் நாளாந்த வாழ்வில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே பார்ப்பவர்களுக்கு அதிலுள்ளவை பெரிய விடயங்கள் போல் தோன்றினாலும் சாதாரண தமிழ் மக்களால் அது விளங்கிக் கொள்ளக் கூடியவை என நாம் கூறியுள்ளோம்.
இதேபோன்று தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெற்றிருக்கும் பல சட்டத்திற்கு முரணான சம்பவங்கள் தொடர்பிலும் நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம் என யோசப் இராயப்பு தெரிவித்துள்ளார்.