வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவிற்குள் அரச புலனாய்வு பிரிவின் மூன்று அதிகாரிகளை இரகசியமான முறையில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
சட்டத்திற்கு அமைய மாகாண முதலமைச்சர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இதனடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள விக்னேஸ்வரனுக்கு பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் 10 பொலிஸ் கான்ஸ்டபிள்களுடன் பாதுகாப்பு அணியொன்று வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் புலனாய்வாளர்களை புகுத்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையதளம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக அமைச்சரவை பாதுகாப்பு பிரிவில் புலனாய்வாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவிற்கான பயிற்சிகளை பெற்றவர்களே நியமிக்கப்படுவர்.
இந்த நிலையில், விக்னேஸ்வரனின் பாதுகாப்பு பிரிவில், சேர்க்கப்பட உள்ள புலனாய்வு பிரிவினரில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் அடங்குகின்றனர்.
இவர்கள் மூவரும் தமிழ் உட்பட மும்மொழிகளையும் நன்கு சரளமாக பேசக் கூடியவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இவர்களில் சிலாபத்தை சேர்ந்த ஒருவரின் தாய், தமிழ் பெண்மணி ஏனைய இருவரும் பயாகல மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
இவர்கள் புலனாய்வு பிரிவின் தமிழ் டெஸ்க் என்ற தமிழ் அமைப்புகள் சம்பந்தமான தகவல் பிரிவில் நீண்டகாலமாக பணியாற்றியுள்ளனர். அத்துடன் அமைச்சரவை பாதுகாப்பு தொடர்பான எந்த பயிற்சிகளை இவர்கள் பெற்றதில்லை.
இந்த நிலையில் இன்று முதல் இவர்களுக்கு இந்த பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன் தொடர்பான புலனாய்வு தகவல்களை வழங்குவது மாத்திரமே இவர்களின் பொறுப்பு. அவரது பாதுகாப்பு தொடர்பில் இவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.
புலனாய்வு தகவல்களை சேகரித்து வழங்க தேவையான உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என அந்த இணையதளம் கூறியுள்ளது.
அதேவேளை விக்னேஸ்வரன் வடக்கில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் பற்றிய தகவல்களை திரட்ட யாழ். பிராந்திய கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க இரண்டு இராணுவ புலனாய்வாளர்களை நியமித்திருந்தார்.
சிசிர என்ற இராணுவ கோப்ரலும் உபாலி என்ற இராணுவ வீரரும் இந்த புலனாய்வில் ஈடுபட்டனர். இவர்கள் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தகவல் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அந்த இணையதளம், ஹத்துருசிங்கவின் தனிப்பட்ட இரகசிய பணிகளுக்கு பயன்படுத்தப்படுபவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.