வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் மக்களின் உணர்வுகள, அபிலாசைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன என்ற உண்மையை எவரும் மறுதலிக்க மாட்டார்கள்.
அதேநேரம் தமிழ் மக்கள் தங்கள் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு ஜனநாயகம் நிறைந்த கள நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்ற உண்மையும் இங்கு புலப்படுகிறது.
அதாவது தமிழ் மக்களின் உரிமை என்ற விடயம் ஒரு சிலரின் கூக்குரலே தவிர, அது தமிழ் மக்களின் விருப்பு அல்ல என்று இலங்கை அரசுகள் நினைத்தன. அதனைக் காலத்திற்குக் காலம் கூறியும் வந்தன.
இவ்வாறான நினைப்புக்குக் காரணம் தமிழ் மக்கள் தங்களின் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க அரசு தவறியமையாகும்.
ஆயுதக் கலாசாரத்தின் மத்தியில் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று அதட்டினால் யாரால்தான் தமது தேவையைக் கூறமுடியும்? ஐயா! உயிர் தப்புவதுதான் இப்போது நம் அவசியத் தேவை.
அடிப்படைத் தேவைகளைக் கூறி உயிரை இழப்பது புத்திசாலித்தனமல்ல. ஆனபடியால் நம் உயிர் பிழைப்பதற்காக அதட்டுகின்றவர் எதை விரும்புவாரோ அதைக் கூறுவதுதான் அறிவுத்தனம். இந்த அடிப்படைத் தத்துவத்தையே நம் தமிழ் மக்கள் பின்பற்றி வந்தனர்.
இப்போது சர்வதேசத்தின் கடுமையான கண்காணிப்பும் ஜெனிவாத் தீர்மானமும் வட மாகாணத் தேர்தலுக்கு வழியிட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஜெனிவாத் தீர்மானத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்ற கட்டத்தில் அரசு, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்துவது என்ற முடிவை எடுத்த பின்பு அதனை சிறப்பா, எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் நடத்துவதே புத்திசாலித்தனம் என்ற முடிவை ஜனாதிபதி மகிந்த எடுத்துக் கொண்டார்.
கூடவே, தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும், தேர்தல் உத்தியோகத்தர்களும் விடாத பிடி இந்தத் தேர்தலை நேர்மையாக நடத்திக் காட்டுவதென்று தங்களுக்குள் திடசங்கற்பம் கொள்ள, வடக்கின் தேர்தல் ஜனநாயகச் சிறப்போடு நடந்து முடிந்தது.
அச்சமற்ற, ஆபத்தில்லாத தேர்தல் நடப்பதை உறுதி செய்த தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை, அபிலாசைகளை வாக்குகளின் ஊடாகத் தாராளமாகக் கொட்டித் தீர்த்தனர்.
அதன் விளைவுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றி.
இங்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது என்பதை தேர்தல் முடிவாக யாரேனும் பார்த்தால், அது யானையைப் பார்த்த குருடரைப் போலவே நிலைமை முடியும்.
மாறாக, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவானது, இலங்கை அரசு தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறி விட்டது என்பதையும் தமிழ் மக்களின் அபிலாசைகளை, அவர்களின் உரிமைகளை எந்தவிதத் தடையும் தாமதமுமின்றி வழங்குவதற்குப் பின்னடித்துள்ளது என்பதையும் நிறுதிட்டமாக உறுதி செய்துள்ளது.
ஆக, இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, உணர்ந்து கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இத்தகையதொரு முடிவை இலங்கை அரசு எடுக்குமாயின் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப்பாகுபாடுகள் இல்லாது போய், இலங்கையில் இலங்கையர் வாழ்வர்.
இது சர்வ நிச்சயம்.