நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது! ப.சிதம்பரம் – இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே சு.நாச்சியப்பன்

sithamparam_nachchiappanவடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு அமைய நிரந்தர தீர்வினை பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றமைக்கு பாராட்டுத் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கான அதிகபட்ச சுயாட்சி, மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, தமிழர்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையினர் சமமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கான சமஉரிமை இதன் மூலம் கிடைக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தாயகத்தில் தமிழர்களின் பாராம்பரிய உரிமைகள் ஏற்றுகொள்ளப்படுவதுடன், நாட்டின் ஆட்சியில் போதுமான பங்குபற்றுதலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த வெற்றியின் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளதாகவும் ப.சிதம்பரம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய உதவிகள் இனி வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே; இந்திய மத்திய அமைச்சர் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்

சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயற்பட்டு வருகிறது. அதுபோலத் தொடர்ந்து செயற்படும்.

சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித்திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி அமைச்சர்களான, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

TAGS: