நாங்கள் வீழ்ந்து விடவில்லை! உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!

vikatan_262இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்க அடித்தளமாக, ஓர் ஆரம்பமாக… முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்!

இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது, ஈழத் தமிழர்கள் ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், 1,32,255 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார்.

36 தொகுதிகளில் 28 தொகுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற, ஒரு மாகாண சபையில் அதிகளவு தொகுதிகளைப் கைப்பற்றும் கட்சிக்கு, கூடுதலாக இரண்டு தொகுதிகள் எனும் மாகாண சபையின் விதிப்படி, 30 தொகுதிகள் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம்.

இந்தத் தேர்தலில் வேடிக்கையான தோல்வியைத் தழுவினார், டக்ளஸ் தேவானந்தா.

தனித்து நிற்க முனைந்த டக்ளஸை அதட்டி, தனது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுமாறு நிர்பந்தித்து களம் இறக்கினார் ராஜபக்r. ஆனால், தனது செல்வாக்கு மண்டலமான ஊர்காவற்துறையைக்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இழந்தார் டக்ளஸ்.

இலங்கைக்கு வெளியில் அரசியல் செய்யும் ஈழ அரசியல் பிரமுகர்கள், தனித் தமிழீழத்துக்குக் குறைவாக எதையும் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதிகாட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்போ ‘தனி ஈழம்’ என்ற கோரிக் கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, அதையே தேர்தல் கோஷமாக மக்கள் மன்றத்தில் முன்வைத்தார்கள்.

சர்வாதிகார இலங்கைக்குள் எது சாத்தியமோ, அதிலிருந்து தொடங்குவதுதான் புத்திசாலித்தனம் என்பதைப் புரிந்துகொண்ட மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தங்களின் ஏக பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆக, இதுதான் இலங்கையின் நிதர்சனம்!

பிரபாகரனால் சாதிக்க முடியாததை, இந்த சம்பந்தனும் சி.வி.விக்னேஸ்வரனுமா சாதிக்கப் போகிறார்கள்?’ என்ற ராஜபக்rவின் இறுமாப்பு உடைக்கப்பட்டுவிட்டது.

வட மாகாண சபைத் தேர்தல் வெற்றி எந்தளவுக்கு இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கும்?

1987-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவான போது, தனித் தனியாகப் பிரிந்து கிடந்த வடக்கு -கிழக்கை ஒன்றாக்கி, ஒரே மாகாண சபையின் கீழ் கொண்டுவந்து, 1988-ல் முதல் தேர்தலை நடத்தி வரதராஜப்பெருமாளை முதல்வராக்கியது இந்தியா.

அப்போது, ‘இந்தியாவின் இன்னொரு மாநிலமாக மாகாண சபை இருந்தது’ என்ற விமர்சனம், அரசியல் அரங்கில் முன்வைக்கப் பட்டாலும்கூட நிலம், காவல் துறை உள்பட சிவில் நிர்வாக அதிகாரங்கள் சில, அந்த மாகாண சபையின் வசம் இருந்தன.

தமிழ் மக்கள் விரும்பாத வரதராஜப்பெருமாளை, இந்தியா தனது பொம்மை முதல்வராக நியமித்ததும், புலிகள் வரதராஜப்பெருமாளை வெறுத்தார்கள். இன்னொரு பக்கம் சிங்கள ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையை தமிழீழத்துக்கு நிகராகப் பார்த்தது.

இந்த இருவேறு பார்வைகள் நாளடைவில் மாகாண அமைப்பையே செயலற்றதாக்க, 2007-ல் ‘வடக்கு-கிழக்கு இணைப்பு செல்லாது’ என்று கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட, வடக்கும் கிழக்கும் மறுபடியும் பிரிக்கப்பட்டன.

இதோ போர்க்காலத்துக்குப் பிறகு, வட மாகாண சபையை முதன்முறையாகக் கைப்பற்றி இருக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால், வட மாகாண சபை முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியாது என்பதே நிஜம்.

இந்தியா உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட உரிமைகளில் ராஜபக்ஷே மனம்வைத்து எந்த உரிமைகளைக் கொடுக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே சி.வி.விக்னேஸ்வரனின் செயல்பாடுகள் அமையும்.

இது பற்றி கொழும்பில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது,

இலங்கை அரசு, வடக்கு மாகாண சபையை, பிரபாகரனின் சபையாகவே கருதும். இது சுதந்திரமாக இயங்க இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. விரைவில் ஒவ்வொரு மாகாணத்தையும் ஆட்சிசெய்ய இலங்கை அரசு, புதிய அமைச்சர்களை நியமிக்கும் என்று கொழும்பில் பேசுகிறார்கள்.

அப்படிப் புதிய அமைச்சர்களை நியமித்தால், மாகாண சபைகளை நிறைத்திருக்கும் பொம்மைகளாகவே கூட்டமைப்பினர் இருக்க நேரிடும். சிங்களர்கள் ஆட்சி செய்யும் நிலை வரலாம். அதற்கேற்றார் போல சட்டத்திருத்தமும் வரலாம்!’ என்கிறார்கள்.

புலிகளின் தளபதி எழிலனின் மனைவி அனந்தி சசிதரன், இந்த வெற்றி பற்றி என்ன சொல்கிறார்?

சிங்கள ஆட்சியாளர்கள் மீதான மக்களின் வெறுப்பும், கொலையான மக்களின் தியாகமுமே இந்த வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. நான் தேர்தலில் போட்டிடுகிறேன் என்றவுடன், இலங்கை ,ராணுவப் புலனாய்வுக் குழுவின் முழுமையான கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டேன்.

ஒருநாள்கூட என்னை நிம்மதியாகத் தூங்கவிடவில்லை. ‘தேர்தலை விட்டு விலகு… நாட்டைவிட்டு ஓடிப்போ’ என்ற ரீதியில் மிரட்டல்கள் தொடர்ந்தன. உச்சகட்டமாக என் வீட்டுக்குள் நுழைந்து ,ராணுவத் தினர் தாக்கினார்கள். நானும் என் குழந்தைகளும் உயிர் தப்பியதே அதிசயம்தான்.

தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு, நான் ஆளும் கட்சியுடன் இணைந்து விட்டதாக ‘உதயன்’ என்ற பெயரில் போலி நாளிதழ் ஒன்றை அச்சிட்டு மக்களிடம் வதந்தி பரப்பினார்கள். என்னைப் பற்றிக் கேவலமாக எழுதி, துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார்கள்.

இந்த வீண் அவதூறுகள் மூலம் சில வாக்குகளைச் சிதைத்தாலும், என் வெற்றியை அவர்களால் தடுக்க இயலவில்லை. காணாமல்போனோர், அரசியல் கைதிகள் விடுதலை, இழந்த வீடுகளையும் நிலங்களையும் மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட நிவாரணங்களுக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்!” என்றார் அனந்தி சசிதரன்.

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருக்கும் எழுத்தாளர் சயந்தன், தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்தார்.

போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் கிளிநொச்சி வரை ரயில் வந்தது. சர்வதேசத் தரத்தில் சாலைகள் போடப்பட்டன. வடக்கு மாகாண மக்கள் இதுவரை காணாத பல நவீன வாகனங்களைக் கண்டார்கள். ஆனால், இவை எதுவும் இந்தப் பகுதி மக்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவரவில்லை.

தோற்கடிக்கப்பட்ட இனமாக தங்களை உணரும் தமிழ் மக்களின் மனக்காயங்களை, இலங்கை அரசு ஆற்றுப்படுத்தவில்லை என்ற கூட்டு மனக்காயத்தின் கொதிப்புதான் இந்தத் தேர்தல் முடிவுகள்.

வெளிப்படையாகப் பேசவோ, தங்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருக்கவோகூட முடியாத வட பகுதி தமிழ் மக்கள், வாக்குச் சீட்டுகள் மூலமாக ‘எங்களுக்கு தனித்த தமிழர் தலைமை வேண்டும்’ என்பதை மிகத் தெளிவாக சிங்களத் தலைமைக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

ஆனால், இந்த வெற்றியை மக்களுக்குப் பயன்படும் வகையில் கூட்டமைப்பு பயன்படுத்த முடியுமா என்பது, அவர்கள் முன்னுள்ள சவால் என்றார் சயந்தன்.

இலங்கையில் இந்தத் தேர்தல் நடந்த சனிக்கிழமை, புரட்டாசி நோன்பு நாள். அதிகாலை எழுந்து குளித்து கோயிலுக்குச் சென்று தங்களுக்கு வேண்டியதை கடவுளிடம் கேட்கும் வழக்கம் உள்ளவர்கள் ஈழத் தமிழர்கள்.

அந்தச் சனிக்கிழமை நோன்பு நாளில், கோயிலுக்குச் செல்வதற்குப் பதிலாக ஈழ மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று இழந்த அரசியல் உரிமைகளை மீட்டுக்கொள்ளும் வேண்டுதலாக தங்கள் வாக்குகளைப் பதிந்து இருக்கிறார்கள்.

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முடிந்திருக்கலாம். ஆனால், தமிழ் மக்களை ராணுவத்தின் பலத்தில் அச்சுறுத்தியோ, அடக்கியோ கையாண்டுவிடலாம் என்ற பேரினவாதிகளின் கனவுகளை ஈழ மக்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருண்ட மேகமாகக் கவிந்திருந்த கவலைகளும் கண்ணீரும் துடைக்கப்படுமோ, இல்லையோ… ஆனால், இது சாம்பலில் இருந்து மீண்டெழும் ஈழப் பறவையின் முதல் சிறகடித்தல்.

ஈழத் தமிழர்கள் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், ‘நாங்கள் வீழ்ந்து விடவில்லை!’  ”உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!”

முதல்வர் வேட்பாளராக பெரும் வெற்றி பெற்றிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன் என்ன சொல்கிறார்?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் அடங்கிய வட மாகாணத்தில் 36 தொகுதிகளில் 51 பேர் போட்டியிட்டோம். பெரும்பான்மை இடங்களில் நாங்கள் வெல்வோம் என்று நம்பினோம். ஆனால், மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் மிகப் பெரிய வெற்றியை மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள்.

அதிமான பலத்தை மக்கள் எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். இப்போது அரசாங்கத்தோடு எங்களுக்கு உள்ள உறவுதான், மிகப் பெரிய பிரச்சினை. தமிழ் மக்கள் சுயமாக ஆள்வதையோ, தனித்து தங்களுக்கான முதல்வரைத் தேர்ந்தெடுப்பதையோ, பிரிவினைவாத மாகவே ராஜபக்ச அரசாங்கம் கருதுகிறது.

இதுதான் நாங்கள் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய நெருக்கடி. எங்களுடைய அதிகாரங்களை 13-வது சட்டத் திருத்தத்தில் நாங்களே வரையறுத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியான ஒரு பரிசோதனைக் களத்தில் உள்ளோம்.

தெற்கிலும் வடக்கிலும் வாழும் மக்களை நன்கு அறிந்தவன் என்ற முறையில் இலங்கை ஆட்சியாளர்களோடு உறவைப் பேணி, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் சிலவற்றைத் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

அதே நேரத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் எதனையும் விட்டுக்கொடுக்காமல், சுயமரியாதையோடு இதைச் சாதித்தாக வேண்டிய சிக்கலான ஓர் இடத்திலும் இருக்கிறோம். தமிழ் மக்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

TAGS: