வடமாகாண ஆளுநரின் பதில் கிடைத்ததும், முதலமைச்சர் சத்தியப்பிரமாண விடயத்தையும் அமைச்சர் வாரிய நியமனங்களைப் பற்றியும் பரிசீலிப்போம். அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய 28 அங்கத்தவர்களும் ஏகமனதான தீர்மானத்துடன் என்னை முதலமைச்சராக்கும் படி வடமாகாண ஆளுநருக்கு உத்தியோகபூர்வமாக செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
முதலமைச்சர் நியமனத்துக்கான சிபாரிசை அனுப்பி வைத்துள்ளோம். முதலமைச்சர் ஒருவர் யாரிடம் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டுமென்பது மாகாண சபை சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆளுநரின் உத்தியோகபூர்வ பதில் கிடைத்ததும் முதலமைச்சராக எப்பொழுது சத்தியப் பிரமாணம் எடுப்பது? யாரிடம் எடுப்பது என்பது பற்றி பரிசீலிக்கவுள்ளோம் எனக் கூறினார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இவ்விடயம் குறித்து வினவியபோது, மாவை சேனாதிராசா மூலம் எமது முதலமைச்சர் நியமனத்துக்கான சிபாரிசை அனுப்பி வைத்துள்ளோம். முதலமைச்சர் ஒருவர் யாரிடம் பதவிப் பிரமாணம் செய்யவேண்டுமென்பது மாகாணசபை சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களே யாரிடம் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டுமென தீர்மானிக்க முடியும். ஜனாதிபதியிடமோ அல்லது ஆளுநரிடமோ பதவிப் பிரமாணம் செய்யவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சாதாரண சட்டத்தரணி ஒருவரிடமும் சத்தியப் பிரமாணத்தை மேற்கொள்ள முடியும்.
2012 ஆம் ஆண்டும், 1989 ஆம் ஆண்டும் மாகாணசபை முதலமைச்சர்கள் ஜனாதிபதியிடமும் ஆளுநரிடமும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளார்களே என வினவியபோது 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபையில் வென்றவர்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற காரணத்தினால் அவர்கள் ஜனாதிபதியிடம் பதவிப் பிரமாணம் செய்தார்கள்.
அதேபோல் 1989 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஆளுநர் முன் பதவிப் பிரமாணம் செய்தார்கள். ஆனால், அந்தத் தேவை வடக்கு மாகாணத்திற்கு தேவையில்லை. யாரிடம் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டுமென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்களே முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.
கொஞ்சம் பொறுங்கள் ! மேதகு பிரபாகரனிடமே சத்திய பிரமாணம் எடுத்து விடலாம் !