சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக உயர்நிலைத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையே அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்னை நீடித்து வரும்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப் கலந்து கொண்டுள்ளார். இதனையொட்டி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை, ஷாரீப் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்து ஆக்கப்பூர்வமான இந்த சந்திப்பு வழிவகுத்துள்ளது. ஈரானின் புதிய அணுகுமுறை மற்றும் பார்வை வருங்காலத்திலும் தொடர வேண்டும்.
அணுசக்தி விவகாரத்தில் அதிபர் ஒபாமா தெரிவித்ததை போல், வெளிப்படையாக ஈரான் செயல்பட வேண்டும்.
ஈரானுடனான எங்கள் உறவை பலப்படுத்தவும், மக்களின் கேள்விகளுக்கு விடை காணவும் முயற்சித்து வருகிறோம். இந்த கூட்டத்தில் ஈரான் அமைச்சர் அணுசக்தித் திட்ட
பிரச்னை தொடர்பாக சில தீர்வுகளை முன்வைத்துள்ளார்.
அவற்றில் எந்த தீர்வை முன்னெடுத்து செல்வது என்பதை ஆலோசித்துதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று கெர்ரி தெரிவித்தார்.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாரீப் கூறுகையில், “முதல்கட்ட பேச்சுவார்த்தையை நல்லபடியாக தொடங்கியுள்ளோம். எங்கள் நிலைப்பாடுகளை முன் வைத்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்.
இன்னும் ஓர் ஆண்டுக்குள் இதற்கு தீர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கிறேன்’ என்று ஷாரீப் தெரிவித்தார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜெனீவாவில் அக்டோபர் 15 மற்றும் 16இல் நடத்த இருநாட்டு அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கை தலைவர் கேத்ரீன் ஆஸ்டன் கூறுகையில், “இந்தப் பேச்சுவார்த்தை முன்னேற்ற பாதையில் செல்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு, ஈரான் தெரிவித்துள்ள கருத்துகளை செயல்படுத்தும் விதத்தில்தான் உள்ளது.
அடுத்த சந்திப்பின்போது அவற்றை ஷாரீப் நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் அமைதியான மற்றும் சுமுகத் தீர்வு கிடைக்கவே போராடி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.