வெருகல் முருகன் சிலையை மீளப்பெற புதிய முயற்சி

verugal_murugan_sri_lankaதமிழ்நாடு சிலைகள் காப்பகத்திலுள்ள தமது ஆலயத்திற்குரிய சிலை என நம்பப்படும் முருகன் சிலையை மீளப்பெற தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியை நாடுவதற்கு வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2005 – 2007 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெருகல் பிரதேச மக்களும் தமது இருபபிடங்களிலிருந்து வெளியேறி சுமார் ஒன்றரை வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிகமாக தங்கியிருந்தனர்.

குறித்த காலப்பகுதியிலேயே ஆலயத்தின் முருகன் சிலை கொள்ளையடிக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஆலய நிர்வாகம் நம்புகிறது.

2007ஆம் ஆண்டு தமது பிரதேசத்தில் மீள் குடியேறிய பின்னர் ஆலயத்தை திறந்து பார்த்தபோது குறித்த முருகன் சிலை உட்பட சிலைகளும் வேறு பொருட்களும் ஆலயத்திலிருந்து காணாமல் போயிருந்ததாக ஆலய நிர்வாகத்தின் முன்னாள் பொருளாளர் பத்தக்குட்டி மதிபாலசிங்கம் கூறுகின்றார்.

ஆலயத்தில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பாக சேருநுவர காவல் துறையிலும் தங்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

verugal_muruganமீள்குடியேறி ஒரு சில மாதங்களின் பின்னர் பி.பி.சி. தமிழோசை ஊடாகவே தமிழ் நாட்டில் தமது ஆலயத்திலிருந்து காணாமல்போன சிலை கண்டுபிடிக்கப்பட்ட தகவலை தங்களால் அறிய முடிந்தது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டு சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை மீளப்பெற்று வருவதற்கு இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் அவ்வேளை தொடர்புகொண்டபோது இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக தொடர்பு கொள்வதன் மூலமே இதனை பெற்றுக்கொள்ள முடியும் என பதிலளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் வெளிவிவகார அமைச்சில் ஆவணங்கள் சமர்ப்பித்து இதனை பெற்றுத்தந்து உதவுமாறு கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்தும் இதுவரை பதில் இல்லை என ஆலய நிர்வாகத்தின் முன்னாள் தலைவரான கே.சிதம்பரப்பிள்ளை கூறுகிறார்.

சிலையை அங்கிருந்து எடுத்து வருவதற்கான முயற்சிகளில் 5 வருடங்களின் பின்னர் ஆலய நிர்வாகம் தற்போது மீண்டும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாகம் கூடி சில முடிவுகளையும் எடுத்துள்ளது.

ஆலய நிர்வாகம் கூடி எடுத்துள்ள முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய ஆலய நிர்வாக சபைத் தலைவரான சித்திரவேல கணேஷ்,
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என ஆலய நிர்வாகம் கூடி முடிவு செய்துள்ளது என்றார்.

தமழ்நாட்டில் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிந்து அப்போது முதலமைச்சர் பதவி வகித்த கலைஞர் கருணாநிதிக்கு இதனை மீளப்பெறுவதற்கு உதவுமாறு எழுதப்பட்ட கடிதத்திற்கு அவரால் பதில் தரப்படவில்லை.

தற்போதைய முதலமைச்சரிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாகவே அவருடன் தொடர்பு கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட முருகன் சிலை என தமிழ் நாட்டு ஆய்வாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வேறு எந்தவொரு ஆலயமும் இலங்கையிலிருந்து இதற்கு உரிமை கோரவில்லை இதன் காரணமாக தமது ஆலயத்திற்குரிய சிலை என தங்களால் உறுதிபடக் கூற முடியும் என்றும் அவர் தெரிவிக்கின்றார். -BBC

TAGS: