வடக்கிற்கு உரிய அதிகாரங்களை வழங்காவிடில் அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்படும்!

hassanaliவட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், வடக்கிற்கு உரிய ஆட்சி அதிகாரங்களை அரசாங்கம் வழங்காவிடின், சர்வதே ரீதியாக இலங்கை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம். ரி. ஹஸன் அலி பா.உ. எச்சரித்துள்ளார்.

அது மட்டுமின்றி, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவை அமர்விலும் கடுமையான விமர்சனங்களையும், பிரேரணைகளையும் இலங்கை அரசு எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் ஆயுத அடக்கு முறைக்குள் வாழ்ந்து அவர்களின் விருப்பம் போல் செயற்பட்டார்கள் எனக் கூறுவோர் இன்றைய யாதார்த்த நிலைமைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று புலிகள் இல்லை. அப்படி இருந்தும் அவர்கள் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதான ஒரு கட்டமைப்பினையே இன்றும் வேண்டி நிற்கின்றனர்.

இதனை அவர்கள் தங்களது ஜனநாயக ரீதியிலான வாக்குப் பலத்தின் ஊடாக சர்வதேசத்துக்கு வெளிக்காட்டி விட்டனர்.

தங்களது பிராந்தியத்துக்கு பிராந்திய ரீதியிலான அதிகாரம் தேவை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர் என்பது தெளிவான அவர்களது ஆணை மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, இவற்றினை எல்லாம் இலங்கை அரசாங்கம் புரிந்து கொண்டு சட்ட ரீதியான அதிகாரங்களை வடமாகாண சபைக்கு வழங்குவதுடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

இதனை விட இனி எந்த வழியும் இல்லை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும், முஸ்லிம்களையும் ஏமாற்ற நினைப்பது போன்று தமிழர்களை இனியும் அரசாங்கம் ஏமாற்ற முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது இன்று சர்வதேச ரீதியாகப் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு தமிழ் மக்கள் இன்று அதிகப்படியான ஆணையை வழங்கி விட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: