உதிரும் மாகாண சபை அதிகாரங்கள்!

north_lankaஅரசின் மீதான வெறுப்பினைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள் வடக்கு வாக்காளப் பெருமக்கள். ஏறத்தாழ 85 சதவீத வாக்குகள் என்பது பேரழிவின் பின்னான 4 வருடங்களில் தமிழ் மக்களின் மனங்களில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

அரசு மேற்கொள்ளும் அபிவிருத்திகள் இழப்பினால் வந்த ரணங்களை ஆற்றாது கம்பள நெடுஞ்சாலைகளை் யாவும் அந்நியமான கோடுகளாக வாழ்விழந்த மனிதருக்குத் தெரியும். தமிழ் மக்களின் கூட்டுமன உளவியலில் குவிந்திருந்த எதிர்பரசியலின் உச்சத்தை மாகாண சபைத் தேர்தல் ஆழமாகப் பதிவு செய்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் மாவீரன் பிரபாகரன் என்ற மேடை முழக்கமும் மாவீரர் துயிலுமில்லங்களை மீள நிர்மாணிப்போம் என்கிற வாக்குறுதிகளும் மக்களை அலையலையாக வாக்குச்சாவடிகளை நோக்கி நகர்த்தியிருக்கின்றன.

போலிப் பத்திரிகைகளைக் கண்டு மக்கள் ஏமாறவில்லை. எத்தனையோ தடையரண்களையும் துரோகங்களையும் கடந்து வந்துள்ள மக்களுக்கு சரியானது எது என்பதை உணர்ந்து கொள்ளும் ஆளுமை இருக்கும்.

விக்னேஸ்வரனைத் தவிர ஏனைய விருப்பு வாக்குத் தெரிவிலும் மக்கள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்கள். யாழ். மாவட்டத்தில் நடந்த சகல தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் ஒரு விருப்பு வாக்கினை விக்னேஸ்வரனுக்கு அளிக்குமாறு கட்சி பேதமின்றி எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள்.

ஆகவே அவர் முதலாம் இடத்திற்கு வந்தது ஆச்சரியமான விடயமல்ல.

இருப்பினும் அரசியல் தளத்தில் அறிமுகமற்ற விடுதலைப்புலி தளபதியின் மனைவி என்கிற அடையாளத்தோடு தேர்தலில் இறங்கிய அனந்தி சசிதரன் பெற்ற விருப்பு வாக்கு பல செய்திகளைச் சொல்கின்றன.

அடிப்படை அரசியல் கோட்பாட்டில் மக்கள் உறுதியாக இருப்பதையே அச்செய்தி எடுத்துக் காட்டுகிறது.

தற்போது கட்டிடம் இல்லாத மாகாண சபைக்கு 4 அமைச்சர்களைத் தெரிவு செய்யும் பணி தொடர்வதாக சொல்லப்படுகிறது. அவை முடிந்த கையோடு சபை இயங்குவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து இலங்கை ஜனாதிபதியோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மத்திய வங்கி புளகாங்கிதம் அடைவதால் வடமாகாண சபைக்கு நிதி ஒதுக்குவதில் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது என்று நம்புவோம்.

இனி வடக்கின் சகல அபிவிருத்தி வேலைகளையும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்தாலோசித்தே முடிவெடுப்போம் என்று கூறும் சுதர்சன நாச்சியப்பன் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் விவகாரத்தை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி அவர்களோடு பேசிக் கலந்தாலோசித்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சனைஎ தீர உதவியாக இருக்கும்.

சம்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை அம்மையாரிடம் தமது நிலம் தமக்கு வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 7ம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், விக்னேஸ்வரனுடன் கிழக்கின் எதிரணித் தலைவர் தண்டாயுதபாணியையும் சந்திக்க வேண்டும்.

அதேவேளை வடகிழக்கில் மக்களின் காணிகளில் இராணுவம் இருக்கிறது என்கிற உண்மையை ஐநா சபையில போட்டுடைத்த நவநீதம்பிள்ளை அம்மையார் அபிவிருத்தி என்ற போர்வையில் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு தனியார் காணிகள் ஒதுக்கப்படுவது குறித்துப் பேசியிருக்க வேண்டும். அனேகமாக மார்ச்சில் நடைபெறவுள்ள பேரவை மாநாட்டில் அம்மையார் இது குறித்துப் பேசுவார் என்று நம்புவோம்.

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் மிகுந்த அவதானத்துடன் இதனைப் பலர் வரவேற்றார்கள் வரலாற்று அனுபவங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஏட்டில் இருப்பதைக் கூட நடைமுறைப்படுத்த இயலாதென்று ஒதுங்கிக் கொண்டார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்போர் சிலர்.

ஆனால் எந்த விமர்சனங்களுக்குமின்றி இதோ தமிழ் மக்களுக்குத் தீர்வு வந்து விட்டது என்று குதூகலிக்க ஆரம்பித்து விட்டது ஒரு கூட்டம் அவர்கள் வேறு யாருமில்லை. 23 கிலோ மீற்றர் தொலைவிலிருக்கும் தமிழக காங்கிரஸ்காரர்களே. தமக்கு கிடைத்த வெற்றிபோல் இதனைக் கொண்டாடுகிறார்கள்.

தம்மால் மட்டுமே ஈழ மக்களின் பிரச்சனைக்கு சரியான தீர்வினை வழங்க முடியுமென்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞான­தே­சிகன் கூற ஆரம்­பித்­துள்ளார்.

நாணய மதிப்­பி­றக்­கத்தால் குழம்­பி­யி­ருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்­பரம், கூட்­ட­மைப்பின் தேர்தல் வெற்­றியை தனது வெற்­றி போல் மக்­க­ளுக்கு எடுத்­துக்­காட்ட முயல்­வது தெரி­கி­றது.

கடந்த தமி­ழக சட்­ட­மன்றத் தேர்­தலில் 58 தொகு­தி­களில் தோல்­வி­யுற்று, 5 தொகு­தி­களில் மட்­டுமே அரும்­பொட்டில் வெற்றி பெற்ற காங்­கி­ரஸார், அந்த மாபெரும் தோல்­வி­யி­லி­ருந்து மீண்­டெ­ழ ­மு­டி­யாமல் இதுநாள் வரை தவித்து வந்­தனர்.

கூட்­ட­மைப்பின் வெற்றி என்­கிற தடி­யை  ­ஊன்­றிப்­ பி­டித்­த­படி காங்­கி­ரஸின் அர­சியல் செல்­வாக்­கினை மறு­ப­டியும் தமி­ழ­கத்தில் தூக்கி நிமிர்த்த இதை விட்டால் வேறு வழி­யில்­லை­யென்று முடி­வெ­டுத்­து விட்டார்கள்.

இது தமது தலைவர் ராஜீவ் காந்­தி­யினால் கொண்­டு ­வ­ரப்­பட்ட 13வது திருத்தச் சட்­டத்தின் அடிப்­ப­டையில் உரு­வான மாகா­ண ­சபை என்­பதால், அந்த வெற்றி தமக்­கா­னது என்­கிற கற்­பி­தத்தில் அவர்கள் வாழ்­கின்­றார்கள்.

அடுத்த வருடம் மே மாத­ம­ளவில், நாடா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெறும் சாத்­தியம் இருப்­பதால், முதலில் தமி­ழ­கத்­தி­லுள்ள ஈழ ஆத­ரவு சக்­தி­களின் ஆத­ரவுத் தளத்­தினை உடைக்க வேண்­டிய தேவை காங்கி­ர­ஸா­ருக்கு உண்டு.

அதற்­கான வியூ­கங்­களை இப்­போதே வகுக்க ஆரம்­பித்­து ­விட்­டார்கள். தமி­ழக சட்­ட­ச­பையில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்­களை ஓரங்­கட்டும் வகை­யிலும் தீர்வு குறித்து வடக்கு, கிழக்கில் பொது­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்­கிற தமி­ழக மாண­வர்­களின் கோரிக்­கையை மழுங்­க­டிக்கும் வகை­யிலும், வட இலங்­கையில் தமி­ழர்­களின் ஆட்சி வந்து விட்­டது, இனி எந்­தப் ­போ­ரா­ட்டங்­களும் இங்கு தேவை­யில்லை என்று பரப்­புரை செய்ய விரும்­பு­கி­றார்கள் இந்தக் காங்­கி­ரஸார்.

இது அவர்­களின் அர­சியல் வாழ்­வுப் ­பி­ரச்­சினை. ஆனால் ஈழத்­தமிழ் மக்­க­ளுக்கோ அடிப்­படை வாழ்­வு­ரிமைப் பிரச்­சினை.

ஆனாலும் சிதம்­பரம் துள்­ளிக்­ கு­திப்­பது போல ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பின் கீழ் இருக்கும்  13வது திருத்­தச்­சட்­டத்தைக் கொண்டு இரு தேசங்­களின் இறைமை என்­பதன் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்­களைப் பகிர முடி­யாது என்­பதை முன்னாள் நீதி­பதி விக்­னேஸ்­வ­ரனும், சட்­ட­வாளர் சுமந்­திரன் எம்.பி.யும் புரிந்து கொள்­வார்கள்.

அதே­வேளை, கடந்த வியா­ழ­னன்று, மாகா­ண­ ச­பைக்­கான காணி உரிமை தொடர்­பாக உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, 13வது திருத்தச் சட்­டத்தின் பல­வீ­ன­மான முக்­கிய பக்­கங்­களை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது கவ­னிக்­கத்­தக்­கது.

அர­சி­ய­லைப்புச் சட்­டத்தின் பிர­காரம், மாகா­ணங்­களின் காணி உரி­மை­யா­னது மத்­திய அரசின் ஆதிக்­கத்தில் இருக்கும் என்கிற நீதிமன்றத் தீர்ப்பினை பிரதம நீதிபதி மொஹான் பீரீஸ் வெளியிட்ட விவகாரமே, இப்போது புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

சுயாட்சிக்குரிய அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்று அமைச்சர் ப.சிதம்பரம் பெருமிதமடைந்த ஓரிரு தினங்களில், இந்த நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அத்தோடு, பிரதம நீதிபதியாகவிருந்த சரத் என்.சில்வா, வடக்கு – கிழக்குப் பிரிப்பிற்கான தீர்ப்பினை வழங்கி 13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனமாக்கிய முதல்படியையும் இப்போது நினைவுகூருவது பொருத்தமானது.

ஆகவே தமிழக மக்களின் ஆதரவினை இழக்கும் வகையில் தமிழ்த் தேசிய அரசியலின் நகர்வுகள் அமைவது சரியானதல்ல.  சர்வதேச ஆதரவு என்கிற தளத்தில் தமிழகத்தின் வகிபாகம் மிக முக்கியமானது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

– இதயச்சந்திரன்

TAGS: