வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளோம். இது அடிப்படையில் எமது உரிமைகளுக்கான அபிலாசைகளை இதயங்களில் சுமந்து கொண்டிருக்கும் எமது மக்களின் மகத்தான வெற்றியாகும்.
இந்த வெற்றியின் மூலம் எங்கள் உரிமைப் போரின் வீச்சு என்றும் மங்கிவிடாது என்பதை எமது மக்கள் முழு உலகுக்கும் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறு வடக்கு மாகாணசபைத் தேர்தலில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கூட்டமைப்பின் வெற்றி தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
அதிகாரபலம், இராணுவத் தலையீடுகள், வன்முறைகள், அரச வளங்களைப் பயன்படுத்திய பரப்புரைகள், திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள், சமூக சேவை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விதமான மாயைகள் எனப் பல முனைகளிலும் அரச தரப்பினர் களமிறங்கி வலம் வந்த போதும், எமது மக்களை அவர்களால் ஏமாற்ற முடியவில்லை.
இராணுவக் கெடுபிடிகளால் அடிபணிய வைக்க முடியவில்லை. அதிகார துஷ்பிரயோகத்தால் மயக்கிவிட முடியவில்லை. எமது மக்கள் சகல விதமான நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து, நிமிர்ந்து நின்று தமது உணர்வுகளை இடிமுழக்கமென வெளிப்படுத்தி எம்மை மிகப்பெரும் வெற்றியடைய வைத்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பு எமது மக்களின் உணர்வுகள் மௌனமாகவே குமுறிக்கொண்டிருக்கின்றன. புலம்பெயர் தமிழ் உறவுகளும், தமிழக மக்களும் தொடர்ச்சியாக எமது மக்கள் மீது நடத்தப்பட்ட அநீதிகளை எதிர்த்துக்குரல் கொடுத்தனர், போராட்டங்கள் நடத்தினர். உச்சபட்சமாக உயிர்க் கொடைகளையும் மேற்கொண்டனர். சர்வதேசமும் மனித உரிமை நிறுவனங்களும் எமக்காகப் பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டன.
ஆனால், எமது மண்ணில் எமது மக்களால் உணர்வுகளை வெளிப்படுத்திக் கிளர்ந்தெழ முடியவில்லை. நீட்டப்பட்ட துப்பாக்கிகள் மத்தியில் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும் வன்முறைகளும் ஊடக ஒடுக்குமுறைகளும் எமது கழுத்துக்களை இறுக நெரித்தன.
எனினும் அது எங்கள் இதயங்களுக்குள் கிடந்து எரிமைக் குழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தன. இப்போது இந்த வடமாகாண சபைத் தேர்தலில் எமது உணர்வுகள் சகல ஒடுக்குமுறைகளையும் உடைத்துக்கொண்டு எரிமலையாக வெடித்து மேலெழுந்து விட்டது.
எனவே தான் இந்த வெற்றியை நாம் வாக்களிப்பு எண்ணிக்கையில் மட்டும் கிடைத்த வெற்றி எனக் கருதவில்லை. எமது மக்களின் உரிமை வேட்கையின் மீதுள்ள உணர்வில் வெடித்துக் கிளம்பிய மகத்தான வெற்றி எனப் பிரகடனம் செய்கிறோம்.
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே, நீங்கள் எமக்கு வழங்கிய ஆணை எவ்வளவு கடமையானது என்பதை நாமறிவோம். அதேவேளையில் எத்தகைய உன்னதமானது என்பதையும் நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
எமது பணி இரட்டைக் குதிரை பூட்டிய வண்டி என்பதை நாமறிவோம். ஒன்று எமது மக்களின் சிதைந்து போன வாழ்வை கட்டியெழுப்புவது. மற்றையது எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை விடாப்பிடியான உறுதியுடன் முன்னெடுப்பது. இந்த இரு பணிகளையும் மாகாண சபையின் அதிகாரங்களைப் பாவித்தும் அதற்கு வெளியேயும் மனப்பூர்வமாகவும் துணிச்சலுடனும் முன்னெடுப்போம் என உறுதி செய்கிறோம்.
“மக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றின் உந்து சக்தி” என்பதில் நாம் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் உங்கள் ஆதரவு என்ற மகத்தான ஆயுதங்களைக் கையிலெடுத்து எமது உரிமைப் போராட்டத்தில் முன் செல்வோம் என்பதை மீண்டும் உங்களிடம் உறுதி செய்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.