நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரியில் காவலர்களை கொண்டு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு எதுவும் இருந்திருக்கவில்லை என அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கல்லூரிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடப்போவதாகவும் மற்ற கல்விக்கூடங்களை மூடப்போவதில்லை என்றும் அம்மாநில அரசாங்கத்தின் விசேட ஆலோசகர் அப்துல்லாஹி பெகோ பிபிசியிடம் தெரிவித்தார்.
பள்ளிக்கூடங்களை மூடச்செய்ய வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் சண்டையிட்டுவரும் போக்கோ ஹராம் அமைப்பினர் அண்மைய மாதங்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அரச படையினர் தம் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக அவர்கள் இதனைச் செய்துள்ளனர்.
ஞாயிறன்று விவசாயக் கல்லூரியில் நடந்த கோரத் தாக்குதலை நடத்தியது அவர்கள்தான் என சந்தேகிக்கப்படுகிறது.
இராணுவ சோதனைச் சாவடிகள், உணவு விடுதிகள், தேவாலயங்கள், ஏன் பள்ளிவாசல்களும்கூட இவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. -BBC