கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படும்! கிழக்கு தீர்மானம் குறித்து அஞ்சத் தேவையில்லை! அமைச்சர் சுசில்

susil_premjayanthaaஅரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் செயற்பட தயாராக உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு யதார்த்தமாக சிந்தித்து வடக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.

வட மாகாண சபைக்கு ஐ. ம. சு. மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு தலைசாய்த்து வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம். த. தே. கூ. யதார்த்தத்தை புரிந்து நியாயமாக சிந்தித்து செயற்படும் என நம்புகிறோம் என்றார்.

கிழக்கு மாகாண சபையின் தீர்மானம் குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை 

13வது அரசியலமைப்பை உள்ளவாறே அமுல்படுத்துமாறு கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் எதுவித பிரச்சினையும் எழாது என ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார்.

13வது அரசியலமைப்பில் எதுவித மாற்றமும் செய்யாது முன்னெடுக்க வேண்டும் என்ற அதேநிலைப்பாட்டில் ஐ.ம.சு.மு.யில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அடங்கலான சில கட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்புடன் கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வினவப்பட்ட போது பதிலளித்த அமைச்சர்,

காணி அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழே உள்ளது

எனவே அது தொடர்பில் எதுவித பிரச்சினையும் கிடையாது என்றார்.

TAGS: