புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை! அதனால் பிரபாகரன் வீடு தகர்க்கப்பட்டது: இராணுவப் பேச்சாளர்

prabakaran_house_002தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியுடனான வீடு தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின், பாரிய பதுங்கு குழியுடன் அமைந்திருந்த வீடு  நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகர்க்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “

புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்ட பதுங்குழியுடனான வீடு  புலித் தலைவருடையதா என்பது குறித்து எமக்கு சரியாக கூறமுடியாது.

என்றாலும் அது புலிகளின் சுரங்கத்துடனான மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் பதுங்கு குழியுடனான வீடும்  இந்த பிரதேசத்திலேயே இருந்தது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்த வீட்டிலிருந்து அவசரமாக வெளியேறுவதற்கான சுரங்கப் பாதையும் இருந்தது.

அந்த வீட்டுக்கு முன்பாக பிரபாகரன் தன்னுடைய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கான மண்டபமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

புலிகளின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. இந்த வீட்டைச் சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆகையினால் இந்தைக் கட்டிடத்தை தகர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

கண்ணிவெடிகளை அகற்றாமல் கட்டிடத்தைத் தகர்ப்பதனால் ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்வதற்கே கண்ணிவெடிகளை அகற்றியதன் பின்னர் இந்தக் கட்டிடம் தகர்க்கப்பட்டது.

வீட்டைச் சுற்றி புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் யாவும் கடந்த வாரமே அகற்றப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீட்டுக்கு முன்பாக பாதுகாப்பு கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் வாகனம் அந்த வீட்டுக்குள் நுழைவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

வீட்டைச்  சுற்றி ஆறு வரிசைகளில் முட்கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு வரிசையிலிருந்து மற்றுமொரு வரிசைக்கான தூரம் 20 அல்லது 25 மீற்றராக இருந்தது. அவற்றுக்கு இடையிலும் பாதுகாப்பு கூடாரங்களும்; இருந்தன என்றும் அவர் கூறினார்.

இந்த  வீட்டைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியும் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: