உலக பொருளாதாரத்தை அமெரிக்க கடன் நெருக்கடி பாதிக்கும்

white_houseஅமெரிக்காவில் தற்போது நிலவும் கடன் நெருக்கடி உள்நாட்டை மட்டுமின்றி உலக பொருளாதாரத்தையும் பாதிப்படைய செய்யும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எப்.) இயக்குநர் கிறிஸ்டீன் லகார்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஐ.எம்.எப். நிர்வாக இயக்குநர் கிறிஸ்டீன் லகார்ட் பேசியது:

அமெரிக்காவில் இப்போதுள்ள சூழல் நிதிச் சுமையை குறைக்க உதவாது. அரசுத்துறைகள் மூடப்பட்டுள்ளதால் இன்னும் அதிக பாதிப்பையே ஏற்படுத்தும். இது அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிப்படைய செய்யும். எனவே, இந்த நிலையை உடனடியாக போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரிசெய்ய, வருங்காலங்களில் நிதி சீரமைப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், வருவாயை அதிகரிக்க செய்து, கடன் நெருக்கடியை குறைக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.

ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டின் கடன் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஜப்பானில் பணியாளர்கள் தரப்பில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதால் 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 4 சதவீதம் அதிகரிக்கும். இதுபோன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் (ஜி7 நாடுகள் கூட்டமைப்பு) பங்கு மட்டும் உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் ஆகும். எனவே, இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் மற்ற நாடுகளிலும் பிரதிபலிக்கும். இதுபோன்ற நாடுகள் தேசிய திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சர்வதேச சமூகத்துக்கு ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்துவது மிக அவசியம் என்றார் கிறிஸ்டீன் லகார்ட்.

இந்நிலையில் அமெரிக்காவில் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால், 2008ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற அல்லது அதைவிட மோசமான நிதி நெருக்கடி நிலையை மீண்டும் சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜாக் லூ கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்: அரசுத்துறைகள் மூடப்பட்டதால் சுமார் 8 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்ற, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் இணைந்து அரசுத்துறை நிறுவனங்கள் இயங்க வலியுறுத்தி கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம், வேலையை இழந்துவாடும் சில அரசுத்துறையினருக்கு மட்டும் சம்பளம் வழங்க இரு சபைகளிலும் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவின் ஆசியப் பயணம் ரத்து

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிரொலியாக, அந்நாட்டு அதிபர் ஒபாமா இந்த வாரத்தில் மேற்கொள்ளவிருந்த ஆசியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜேய் கார்னி கூறுகையில், “அதிபர் ஒபாமா, இந்தோனேசியா மற்றும் புருணே ஆகிய ஆசிய நாடுகளில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இந்தோனேசியாவில் சனிக்கிழமை (5ஆம் தேதி) நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கருத்தரங்கிலும், அதைத்தொடர்ந்து புருணேவில் கிழக்காசிய மாநாட்டிலும் ஒபாமா பங்கேற்பதாக இருந்தது.

இந்த வாரம் ஒபாமாவின் மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஒபாமாவுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தோனேசியா மற்றும் புருணே செல்வார் என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.