தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை வடமாகாண சபை உருவாக்க வேண்டும்! மன்னார் ஆயர் செவ்வி

rajappu_joseph_02வடமாகாண சபை நிர்வாகம் இந்த நாட்டில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க உழைக்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை  தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.

செவ்வியின் முழுவிபரம் வருமாறு;

கேள்வி: வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 2/3 பெரும்பான்மைப் பலத்துடன் மக்கள் வெற்றியடையச் செய்திருக்கும் நிலையில், அரசியல் விடயங்களில் கூட்டமைப்பு எவ்வாறு தமது அணுகுமுறைகளை நகர்த்த வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2/3 பெரும்பான்மை என்பதை விட, அமோக வெற்றியை பெற்றுள்ளது. இவ்வாறானதொரு வெற்றியை மக்கள் வழங்க வேண்டுமென்று கூறியிருந்த எமது முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க மக்களும் அதை கூட்டமைப்புக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் மக்கள் கூட்டமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன்.

கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் ரீதியான சகல விடயங்களையும் இலங்கையின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டதொரு நிலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விளக்கம் இல்லாதவர்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.

ஆனால், இத்தேர்தல் விஞ்ஞாபனம் இலங்கையின் அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. நீதியரசராக இருந்தவர் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறுவது அவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவுள்ளது. இவற்றையெல்லாம் கவனத்திலெடுக்காது வாக்களித்து கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்த மக்களுக்குத் தேவையானவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண நிர்வாகம் செய்வதற்கு முன்வரவேண்டும்.

ஆகவே, அரசுடனும், தென்னிலங்கை மக்களுடனும் ஒற்றுமையாகவும் சிநேக பூர்வமாகவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உறவாடி தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து தமது திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

குறிப்பாக வடக்கில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அந்தக் கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்றத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இடம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் அரசுடன் பேசி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

போரினால் பல இன்னல்களைச் சந்தித்த மக்கள் இனிமேலும் கஷ்டங்களை அனுபவிக்காமல் இருப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்கி அதனைச் செயற்படுத்தி அந்த மக்களின் வாழ்விலும் ஒளிவீச வடமாகாண சபை அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், பாதை அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, மீள்குடியேற்றம் போன்றவற்றில் கவனமெடுத்து அவற்றை தமிழ் மக்களுக்கு செம்மையாகச் செய்வதன் மூலமே இந்த வெற்றியைத் தந்த மக்களுக்கு கூட்டமைப்பினர் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

கேள்வி: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினருடனான உறவை கூட்டமைப்பினர் எவ்வாறு வலுப்படுத்த வேண்டும்? அவர்களிடமிருந்து எவ்வாறான உதவிகளைப் பெற முயற்சிக்க வேண்டும்?

பதில்: புலம்பெயர் சமூகத்தினர் எமது மக்களுக்காக பல நல்ல விடயங்களை செய்திருக்கிறார்கள். எங்களுடைய அபிலாஷைகளையும் கனவுகளையும் அவர்கள் தாங்கிச் செல்கின்றவர்கள்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் முதலில் தமது கோபங்கள், பகைமைகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளைகள் போன்று வாழ வேண்டும். பிளவுபட்டு இருந்தால் எந்தவொரு நல்ல விடயத்தையும் செய்ய முடியாது.

இன்று எமது மக்களுக்குத் தேவை வாழ்வாதாரமும், அபிவிருத்தியும். ஆகவே, புலம்பெயர் சமூகம் ஒற்றுமையாக இருந்து வடமாகாணத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தாங்களாகவே உருவாக்கி வடமாகாண அரசுடன் இணைந்து கட்டியெழுப்ப முன்வரவேண்டும்.

கேள்வி: தெற்குடனான உறவை கூட்டமைப்பினால் வலுப்படுத்த எடுக்க வேண்டிய முயற்சிகள் யாவை?

பதில்:  முதலில் எமது மக்களுடைய நிலைமையை தெற்கில் வாழ்வோருக்கு நாம் புரிய வைக்க வேண்டும். போரில் எவ்வளவு இழப்புகளை இந்த மக்கள் சந்தித்திருக்கிறார்கள், இன்று அவர்கள் வாழும் கிராமங்களின் நிலைமை என்ன? இவர்களுடைய அவலங்கள் என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

இன்று நாட்டில் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ முடியாததொரு சூழ்நிலை காணப்படுவதுடன், எமது இலட்சியத்துக்கு எதிராகச் செயற்படும் சூழ்நிலையே காணப்படுகிறது. மக்களுடைய சொந்தக் காணிகளை பறிமுதல் செய்தல், அதில் வெளியாரைக் கொண்டு வந்த விவசாயம் செய்வித்தல், சிங்கள மக்கள் வாழாத இடங்களில் புத்த விகாரைகளை தமிழர்கள் பூர்வீமாக வாழ்ந்து வந்த இடங்களில் அமைத்தல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

வடமாகாணம் இராணுவமயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையை காணக்கூடியதாக இருக்கிறது. போர்க்காலத்தில் இராணுவம் இருந்ததில் ஓர் அர்த்தம் இருந்தது. ஆனால், போர் முடிந்ததன் பின்னரும் அவர்கள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடமாகாணத்தில் 95 வீதமான படையினர் உள்ளனர். இத்தனை வீதமான இராணுவத்தினர் இங்கு இருக்க வேண்டியதொரு அவசியம் இல்லை. அரசியல் ரீதியில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பது போன்று பொருளாதாரத்திலும் அவர்களுடைய தலையீட்டை வடக்கில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே, வடமாகாண நிர்வாகம் மத்திய அரசுடன் பேசி எமது மக்களின் விருப்பத்துக்கு மாறான விடயங்களில் இராணுவம் தலையிடுகிறது என்பதைப் புரிய வைத்து, எமது மக்களின் அபிலாஷைகளுக்கும் கனவுகளுக்கும் இவை முரணாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

கேள்வி: மனித உரிமைகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தாவிடில் 2014ஆம் ஆண்டில் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக நவநீதம்பிள்ளை கூறியிருப்பது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்: எம் நாட்டின் (இலங்கையின்) நன்மைக்காகவே நவநீதம்பிள்ளை இந்த விடயத்தைச் செய்கிறாரே ஒழிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதற்காகவல்ல. இலங்கை அரசு மனித உரிமைகள் தொடர்பில் நம்பகத் தன்மையாகச் செயற்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் உலகின் நன்மைக்காக, மக்களின் வாழ்வுக்காக சர்வதேச ரீதியாக அவர்கள் (ஐ.நா.மனித உரிமைகள் பேரவை) இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வார்கள்.

ஆகவே, இவற்றைத் தவிர்க்க வேண்டுமாகவிருந்தால் சர்வதேசத்தின், ஐ.நா.வின் உதவியைப் பெற்று உள்நாட்டிலேயே நம்பகத்தன்மையான விசாரணையை மேற்கொண்டு அந்த அறிக்கையை அரசே சமர்ப்பிக்க வேண்டும்.

நாட்டில் இன்று பலர் காணாமல் போயுள்ளதுடன், பலர் சட்டங்களுக்கு முரணான வகையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே, இவற்றையெல்லாம் விசாரணை செய்ய வேண்டும்.

இறுதிக்கட்டப் போரின் இறுதி எட்டு மாதங்களில் 146,000 இற்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இந்த மக்களுக்கு என்ன நடந்ததென்பதை அறிய வேண்டியதொரு கடப்பாடு இருக்கிறது.

இலங்கையுடையதும் மக்களுடையதும் நன்மைக்காக அரசு ஒரு நம்பகத் தன்மையான விசாரணையை முன்னெடுத்து குற்றவாளிகளை இனம் காண வேண்டும். குற்றவாளிகளை இனம் கண்டதன்பின் தண்டிக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. இந்தக் குற்றத்தை நான் தான் செய்தேன் என்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினாலே போதும்.

அவ்வாறு மன்னிப்புக் கோரும் போது அவர்களுக்கு மன்னிப்புக் கொடுத்து அவர்களை மன்னிப்பதன் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கேள்வி: கொழும்பில் வாழும் வடகிழக்கு மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் மேல் மாகாண சபைத்தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: மேல்மாகாணத்திலும் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கும் வடபகுதி மக்கள் தொடர்பில் அதிக அக்கறையிருக்கிறது. ஆகவே, அவர்களும் தங்களுடைய எண்ணங்களை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் தம்முடைய வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய ஒரு தேவை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கிறது. ஆகவே, மேல் மாகாணத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன்.

கேள்வி: வடகிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற ஒரு ஆணையை மக்கள் மத்தியில் கூட்டமைப்பினர் வழங்கியிருந்தனர். ஆனால், இன்று ஜனாதிபதி வடகிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாதென கூறியிருக்கிறார். இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப்பினர் எவ்வாறானதொரு நடவடிக்கையை எடுக்க வேண்டும்…?

பதில்: ஆம் இது ஒரு சிக்கலான விடயம் தான். இதனை வரவேற்க முடியாது. ஏனெனில், யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ள முடியும். யுத்தம் முடிந்ததன் பின்னர் அவர்கள் அங்கு தங்கியிருப்பதென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் கூட பல நாடுகளிலிருந்து வந்து இராணுவத்தினர் யுத்த நாடுகளில் கடமை புரிந்தனர். கடமைகள் முடிந்ததன் பின்னர் அவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு திருப்பி வரவழைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வேறு தொழில்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டு குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்தனர்.

அவ்வாறானதொரு நிலைமையை இலங்கை அரசும் ஏற்படுத்தி நாட்டு மக்கள் அனைவரும் சுபீட்சமாகவும் நண்பர்களாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

கேள்வி: வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டாக இருப்பதன் காரணத்தினால் அவர்களுடைய அமைச்சுப் பதவிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: தமிழ் மக்கள் அணிதிரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்ததற்கு காரணம் அவர்கள் பதவியைப் பெற வேண்டுமென்பதற்காகவோ அல்லது தமது சொந்த விடயங்களைச் செய்வதற்காகவோ அல்ல. மாறாக மக்களின் நன்மைகளைப் பேணுவதற்காகவே அவர்கள் தங்களது வாக்குகளை வழங்கியுள்ளார்கள்.

போட்டி போட்டுக் கொண்டு பதவிகளைப் பெறவேண்டுமென்று சண்டை போட்டால் அது மக்கள் மத்தியில் ஒரு வித வெறுப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகவும் போய்விடும்.

ஆகவே, தலைமைப்பீடம் என்று ஒன்றுள்ளது. அங்கே தங்களுடைய கோரிக் கைகளை முன்வைத்து அவர்கள் எடுக்கும் முடிவுக்கிணங்க ஒற்றுமையாக செயற்படுவதன் மூலமே வாக்களித்த மக்களுக்கு நன்மைகளைச் செய்ய முடிவதுடன், தமிழ் மக்களின் தேசியத்தையும் காப்பாற்ற முடியும்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினால் ஈர்க்கப்பட்டே தமிழ் மக்கள் கூட்டமைப்பினரை வெற்றியடையச் செய்துள்ளனர். எனவே, அதற்கிணங்கவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நடந்து தமிழ் மக்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

ஆகவே, இவற்றை விட்டுவிட்டு கட்சிக்கு கட்சி, நபருக்கு நபர் என எதிராகச் செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

TAGS: