எகிப்தில் போர் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது போலீஸாருக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மோர்ஸி ஆதரவாளர்களுக்கும் இடையே நேரிட்ட மோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
எகிப்தில் உள்ள கெய்ரோ மத்திய சதுக்கத்தில் 1973ம் ஆண்டு நடைபெற்ற அரபு-இஸ்ரேலி போர் நினைவு தின நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எகிப்து தேசியக் கொடி மற்றும் எகிப்தின் ராணுவத் தளபதி அப்துல் பத்தாக் அல் சிசியின் பதாகையை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். அதே நேரத்தில் கூட்டமாகச் சேர்ந்து பேரணி நடத்த முயன்ற மோர்ஸி ஆதரவாளர்களுக்கும், ராணுவ ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இந்தக் கலவரத்தில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து எகிப்தின் தெற்கு பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு சம்பவங்களிலுமாக 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர்.
இதுகுறித்து எகிப்து சுகாதாரத்துறை உயரதிகாரி அகமது அல் அன்ஸாரி கூறியது:
“இந்தக் கலவரத்தில் பெரும்பாலானோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் முதல் நிகழ்ந்து வரும் கலவரத்தில் இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.
5 ராணுவ வீரர்கள் சாவு: இதனிடையே ஜூஸ் கனால் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ வீரர்கள் மீது மர்ம நபர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.