யாழ். குடாநாட்டில் கடும் வரட்சியினாலும் மழை இன்மையினாலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் இன்னமும் பருவமழை ஆரம்பிக்கவில்லை. கடும் வரட்சியும் வெப்ப நிலையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் விதைத்த வயல்களில் முளைத்துவரும் நெற்பயிரை பாதுகாக்க முடியாமையால் பயிர்கள் கருகி அழிவடைந்து வருவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.
கடும் வரட்சியால் குளங்கள் வற்றி வரண்டுபோய் உள்ளதுடன், கிணற்று நீர் மட்டமும் குறைவடைந்து வருகின்றது.
யாழ். மாவட்டத்தில் முற்றுமுழுதாக நெற்பயிர்ச் செய்கை மழையை நம்பி மானாவாரி பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த காலங்களில் நெல் விதைப்பு காலத்துக்கு ஏற்ற முறையில் மழை பெய்து வந்ததால் உரிய வேளையில் மூன்று மாத நெல்லையும் விதைப்பது வழமையாகும்.
இந்த வருடம் உரிய முறையில் மழை பெய்யாமையால் நெல்லை உரிய காலத்தில் விதைக்க முடியாமலும் விதைத்து முளைத்த பயிரை பாதுகாக்க முடியாமலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.